பணத்தை ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
By DIN | Published On : 16th May 2019 08:46 AM | Last Updated : 16th May 2019 08:46 AM | அ+அ அ- |

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கண்டெடுத்த பணம், செல்லிடப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு போலீஸார் செவ்வாய்க்கிழமை வெகுமதி வழங்கிப் பாராட்டினர்.
பண்ருட்டி வட்டம், சி.என்.பாளையம் அருகே உள்ள பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி சத்யா. பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ரூ. 5,700, செல்லிடப்பேசி ஆகியவற்றைத் தவறவிட்டுவிட்டார்.
இதுகுறித்து பண்ருட்டி புறக்காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இந்த நிலையில், பண்ருட்டி அருகே உள்ள சாத்தமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காசிலிங்கம் மனைவி அம்மணி பேருந்து நிலையம் கழிப்பறை அருகே ரூ. 5,700 மற்றும் செல்லிடப்பேசி கிடந்ததைக் கண்டெடுத்து வந்து செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதையடுத்து, பண்ருட்டி காவல் ஆய்வாளர் ப.சண்முகம் அவரது நேர்மையைப் பாராட்டி வெகுமதி வழங்கினார். பின்னர், பணம், செல்லிடப்பேசியை உரியவரிடம் ஒப்படைத்தார்.