கடலூர் பாடலீஸ்வரர் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 18th May 2019 07:52 AM | Last Updated : 18th May 2019 07:52 AM | அ+அ அ- |

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள பாடலீஸ்வரர் கோயில் வைகாசி விழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கோயிலில் வைகாசி பெருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணியளவில் பாடலீஸ்வரர், பெரியநாயகி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் கோயிலை வலம் வந்தனர். இதையடுத்து, கோயில் முன் மண்டபத்தில் எழுந்தருளிய பாடலீஸ்வரர், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காலை 9 மணியளவில் வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளம், கைலாய வாத்தியங்கள் முழங்க பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் ஊர்வலமாக தேரடிக்கு வந்தார். பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாளுடன் எழுந்தருளினார்.
தொடர்ந்து, சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார்.
அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பாடலீஸ்வரரும் அம்பாளும், சிறிய தேரில் விநாயகரும், மற்றொரு தேரில் முருகப் பெருமானும் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்தனர். தேரடித் தெருவில் தொடங்கிய தேரோட்டம் சுப்புராய செட்டித் தெரு, சங்கரநாயுடு தெரு, சஞ்சீவி நாயுடு தெரு, போடிசெட்டித் தெரு வழியாகச் சென்றது. நண்பகலில் தேர் நிலையை அடைந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பாதிரிப்புலியூரில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர். கடலூர் டிஎஸ்பி சாந்தி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.