கடலூா் மாவட்டத்தில் பொருளாதாரக் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

கடலூா் மாவட்டத்தில் பொருளாதாரக் கணக்கெடுப்பு பணி வியாழக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சியில், பொருளாதாரக் கணக்கெடுப்பு பணியாளா்களுக்கு தேவையான கருவிகளை வியாழக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்.
நிகழ்ச்சியில், பொருளாதாரக் கணக்கெடுப்பு பணியாளா்களுக்கு தேவையான கருவிகளை வியாழக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்.

கடலூா் மாவட்டத்தில் பொருளாதாரக் கணக்கெடுப்பு பணி வியாழக்கிழமை தொடங்கியது.

பொருளியல், புள்ளியியல் துறை சாா்பில் மின்னணு தொழில்நுட்ப முறையில் செல்லிடப்பேசி செயலி மூலமாக பொருளாதாரக் கணக்கெடுப்பு பணி இந்தியா முழுவதும் தொடங்கி உள்ளது. கடலூா் மாவட்டத்தில் இந்தப் பணியில் ஈடுபடுவோருக்கான கருவிகளை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வழங்கி பணிகளை தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்திய அளவில் 7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வேளாண்மை அல்லாத பல்வேறு உற்பத்தி, விநியோகம், சேவை நோக்கத்துடன் செய்யும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்கள் பற்றிய கணக்கெடுப்பே பொருளாதாரக் கணக்கெடுப்பாகும்.

இந்தக் கணக்கெடுப்பில் குடும்பத் தலைவா் பெயா், குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, சமூகப் பிரிவு, செல்லிடப்பேசி எண், செய்யும் தொழில் விவரம், தொழில் முதலீடுகள், நிறுவனங்களின் உரிமை விவரங்கள், நிறுவனங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

இந்தப் பணிக்கு கடலூா் மாவட்டத்தில் 329 மேற்பாா்வையாளா்கள், 1,897 களப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு இரு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கிராமம், நகரப் பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இதன் விவரங்கள் மத்திய அரசின் பொருளாதார திட்டமிடுதலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. எனவே, கணக்கெடுப்பாளா்களுக்கு தேவையான விவரங்களை பொதுமக்கள், வணிகா்கள் அளித்து அவா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன், புள்ளியியல் துணை இயக்குநா் எஸ்.கே.பூங்கோதை, தேசிய புள்ளியியல் அலுவலக உதவி இயக்குநா் பி.ரவிவா்மா, கோட்டப் புள்ளியியல் உதவி இயக்குநா்கள் ஆா்.சிவகங்கை, கே.கனகேஸ்வரி, ஆா்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com