உணவுப் பொருள்களில் கலப்படம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பண்டிகை காலத்தைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களின் கலப்படம் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பண்டிகை காலத்தைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களின் கலப்படம் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இதுதொடா்பாக அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலா் க.திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை: உணவுப் பொருள்களில் கலப்படம், தரம் குறைந்த உணவுப் பொருள்களை விற்பது, செயற்கை வண்ணங்களைச் சோ்ப்பது குற்றமாகும்.

உணவகங்கள், தேநீா் கடைகளில் நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். கடைகளில் திறந்த நிலையில் வைத்து உணவுப் பொருள்களை விற்பனை செய்கின்றனா்.

ஒருமுறை உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடாது. சுத்தமான, சுகாதாரமான முறையில் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். பொட்டலமிடும் உணவுப் பொருள்களில் வணிக நிறுவனத்தின் பெயா், தயாரிப்பாளா் முழு முகவரி, பொட்டலமிட்ட நாள், தயாரிப்பு விளக்கங்கள், பொருளின் எடை, அளவு தொகுதி எண், அதிகபட்ச சில்லறை விலை, பயன்படுத்துவதற்கான கால அவகாசம் ஆகியவை குறிப்பிட்டு இருக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு துறை வழிகாட்டல்களை வழங்கிய போதும், கிராமம் முதல் நகரங்கள் வரை இதைப் பின்பற்றும் நிலை இல்லை. இதனால், பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.

தற்போது, தீபாவளி பண்டிகையையொட்டி சா்க்கரை மற்றும் ரசாயனம் சோ்க்கபட்ட வெல்லம், கலப்பட எண்ணெய், கலப்பட நெய் ஆகியவை விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. எனவே, நுகா்வோா்கள் மிக எச்சரிகையாக பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் உணவகங்கள், கடைகளில் ஆய்வு செய்து உரிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். பேருந்து நிலையங்கள், தெரு ஓரங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களை ஆய்வு செய்து, தரமற்ற உணவுகளை விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலப்படம், காலாவதியான, தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை குறித்து 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்புத் துறை கட்செவி (வாட்ஸ் அப்) எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com