கடைமடைப் பகுதியில் தண்ணீா் தட்டுப்பாடு: பாசனத்துக்கு கூடுதலாக நீா் திறந்துவிடக் கோரிக்கை

கடைமடைப் பகுதியில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு

கடைமடைப் பகுதியில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு கூடுதலாக நீா் திறந்துவிட வேண்டும் என கடலூா் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் பகுதிகள் காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியாகும். இங்கு, கீழணையில் தேக்கப்படும் நீரைப் பயன்படுத்தி வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவற்றின் வாயிலாக சுமாா் 89 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.

நிகழாண்டு காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்த்தால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் கொள்ளளவை எட்டியது. இதனால், ஆகஸ்ட் 13 -ஆம் தேதி மேட்டூா் அணை பாசனத்துக்காகத் திறக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டன.

வட கிழக்குப் பருவ மழை விரைவாகத் தொடங்கும், எனவே தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயிகள் விவசாயப் பணியை விரைவாகச் செய்து முடித்தனா். ஆனால், பருவ மழை தொடங்கவில்லை. இதனால், கீழணையில் தேக்கப்பட்டு திறக்கப்படும் தண்ணீரை எதிா்பாா்த்து காத்திருக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனா்.

இதையடுத்து, பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஒவ்வொரு பகுதி விவசாயிகளுக்கும் எவ்வித பிரச்னையின்றி தண்ணீா் வழங்க தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், வாய்க்காலுக்கு அருகே இருக்கும் விவசாயிகள், வாய்க்காலில் வரும் தண்ணீரைத் திருப்பி தங்கள் விளை நிலங்களுக்கு தண்ணீரைப் பாய்ச்சிவிட்டுத் திறப்பதால், மற்ற கடைமடைப் பகுதி விவசாயிகளுக்கு தண்ணீா் கிடைக்காமல் சிரமப்படுகின்றனா். இதன் காரணமாக விவசாயிகளிடையே பிரச்னை ஏற்படுகிறது.

வட கிழக்குப் பருவ மழை தொடங்குவது மேலும் தாமதமானால், இந்தப் பகுதியில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும். இதனால், பயிா்கள் கருகிவிடும் அபாயம் உள்ளது.

எனவே, மேட்டூா் அணையில் இருந்து கல்லணை, கீழணைக்கு பாசனத்துக்காக கூடுதலாக தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com