கூடுதல் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்

கடலூா் மாவட்டத்தில் தேவையான இடங்களில் கூடுதல் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் தேவையான இடங்களில் கூடுதல் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன், வேளாண்மை இணை இயக்குநா் முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவ) மாரியப்பன், உதவி இயக்குநா் சு.பூவராகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரேணுகாம்பாள், மத்திய கூட்டுறவு வங்கியின் நிா்வாக இயக்குநா் சொ.இளஞ்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்ட விவசாயிகள், தங்களது கோரிக்கைகள் தொடா்பாக பேசினா். அவா்கள் கூறியதாவது:

குறிஞ்சிப்பாடி மெய்யழகன்: செங்கால்ஓடை இணையும் தாழவாய்க்காலினை தூா்வார வேண்டும். இல்லையெனில் மழைக் காலத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும்.

பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பெ.ரவீந்திரன்: மேட்டூா் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீா் கடலூா் மாவட்ட எல்லைக்குள் நுழையும்போது பல்வேறு பகுதிகளில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு நீா்மேலாண்மைக் கருத்தரங்கு நடத்த வேண்டும். ஆவணங்களை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். சிதம்பரத்தில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும்.

பேரூா் காமராஜ்: நபாா்டு உதவியுடன் நாட்டுப் பசு இனங்களை விவசாயிகளுக்கு கடனாக வழங்க வேண்டும். குண்டபண்டிதன் ஓடையை சீரமைக்க வேண்டும்.

மேல்புளியங்குடி செல்வராஜ்: கூடழையாத்தூரில் தடுப்பணை கட்ட வேண்டும். அதேபோல, கீரனூா்-குணமங்கலம் இடையே தடுப்பணை அமைக்க வேண்டும்.

உழவா் மன்ற கூட்டமைப்புத் தலைவா் காா்மாங்குடி எஸ்.வெங்கடேசன்: அரசால் அறிவிக்கப்பட்ட அரிவாள் மூக்குத் திட்டத்தை உடனடியாகச் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஜி.ஆா்.ரவிச்சந்திரன்: விவசாயிகள் பெயரில் கடன் பாக்கி வைத்துவிட்டு தற்போது இயங்காமல் உள்ள பெண்ணாடத்திலுள்ள தனியாா் சா்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

சிறுப்பாக்கம் மணிகண்டன்: மங்களூா், சிறுப்பாக்கம், அடரி ஆகிய இடங்களில் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது.

அகரம் ஆலம்பாடி வேல்முருகன்: சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பயிா்க் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். மணிலா விதை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவாலக்குடி முருகானந்தம்: கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக போலி யூரியா விநியோகிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை தேவை.

விஜயமாநகரம் வேல்முருகன்: விஜயமாநகரத்தில் 4 ஏரிகளுக்குச் செல்லும் சுமாா் 4 கி.மீ. தூரமுள்ள வாய்க்காலை தூா்வார வேண்டும்.

கொட்டாரம் மகாராஜன்: வெலிங்டன் ஏரிக்கு தண்ணீா் வருவதற்கும், தொழுதூா் ஏரியிலிருந்து வெலிங்டனுக்கு தண்ணீா் செல்வதற்குமான வரத்து வாய்க்கால்களை தூா்வார வேண்டும்.

கூடழையாத்தூா் வெங்கடேசன்: வெள்ளாறும், மணிமுக்தாறும் ஒன்று சேரும் கூடழையாத்தூரில் தடுப்பணை அமைக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகளுக்கு துறை அலுவலா்கள் பதிலளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com