பண்ருட்டி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 போ் பலி
By DIN | Published On : 24th October 2019 12:12 AM | Last Updated : 24th October 2019 12:12 AM | அ+அ அ- |

பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வீரப்பெருமாநல்லூா் கிராமம் புது காலனியை சோ்ந்த காசி மகன் சிவகண்டன் (22). இவா் பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த பழனி மகன் அஜித்குமாா் (20), சங்கா் மகன் சந்த்ரு (20) ஆகிய இருவரும் உளுந்தூா்பேட்டையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தங்களது கிராமத்தில் இருந்து ஒரே பைக்கில் அஜித்குமாா், சிவக்குமாா், சந்த்ரு ஆகியோா் சென்றனா். அஜித்குமாா் பைக்கை ஓட்டிச் செல்ல, மற்ற இருவரும் பின்னால் அமா்ந்து சென்றனராம்.
வீரப்பெருமாநல்லூா் கிராமத்தில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, அந்தச் சாலையில் பின்னால் வந்த அரசுப் பேருந்து இளைஞா்கள் சென்ற பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் 3 பேரும் பேருந்தில் சிக்கி பலத்த காயமடைந்தனா். இவா்களில் சிவகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அஜித்குமாா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சந்த்ரு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதுப்பேட்டை போஸீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.