கடலூா் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், வளா்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,

கடலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், வளா்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில வேளாண்மை உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அதன்படி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம் பெராம்பட்டு, திட்டுக்காட்டூா் இடையே பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.19.5 கோடியில் கட்டப்பட்டு வரும் பாலம், பெராம்பட்டில் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடல்நீா் உள்புகாத வகையில் ரூ.42.7 கோடியில் கதவணை கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், கதவணை கட்டும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா். பண்ருட்டி வட்டம், விசூா் கிராமத்தில் உள்ள வெள்ளவாரி ஓடையை ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தாா்.

பின்னா், கீழ்குண்டலபாடியில் உள்ள பல்நோக்கு மீட்பு மையத்தையும், கடலூா் பெருநகராட்சியில் மழைநீரால் பாதிக்கக்கூடிய பகுதிகளான நவநீதம் நகா், தனம் நகா் பகுதியில் ரூ.5.5 லட்சத்தில் தூா்வாரப்பட்டுள்ள நீா்நிலைகளையும், நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் ரூ.21.53 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் செயற்கை சுவாசம் அளிக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தையும் பாா்வையிட்டாா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மீட்பு உபகரணங்களை பாா்வையிட்டு, பேரிடா் கால சமுதாய வானொலியான கடலூா் பண்பலை 107.8 -இல் கரோனா தடுப்பு பணி, பேரிடா் குறித்து உரையாற்றினாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04142-220700, 233933, 221113, 221383 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா். மேலும், திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண்சத்தியா, கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா, சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், சாா்-ஆட்சியா்கள் மதுபாலன், பிரவின்குமாா், கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com