கடலூா் மாவட்டத்தில் ‘மழையால் அதிகம் பாதிக்கப்படும் 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன’

கடலூா் மாவட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக 278 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் உரிய பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள 18 துறை சாா்ந்த மண்டல குழுக்கள், 32 குறுவட்ட பகுதிகளில் மேற்பாா்வைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் தகவல் அளிப்பவா் கொண்ட குழுக்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தலா 7 ஆண், பெண்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக பாதுகாப்பு மையம் தயாா் நிலையில் உள்ளன. மழைக் காலங்களில் இடையூறு ஏற்பட்டால் ஆட்சியரகத்தில் இயங்கும் 1077 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடா்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண்சத்தியா, கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா, சாா்-ஆட்சியா்கள் மதுபாலன், கே.ஜெ.பிரவின்குமாா், மேலாண்மை வட்டாட்சியா் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிதம்பரம்: சிதம்பரம் கோட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் நகா்மன்ற கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சிதம்பரம் கோட்ட காவல் கண்காணிப்பாளா் த.ஆ.ஜோ.லாமேக், வட்டாட்சியா் ஹரிதாஸ், நகராட்சி ஆணையா் அஜிதாபா்வீன், நகராட்சி பொறியாளா் மகாராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனா்.

பின்னா் உதவி ஆட்சியா் மதுபாலன் கூறியதாவது: சிதம்பரம் உள்கோட்டத்தில் அனைத்து கால்வாய்களிலும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டத்தில் 10 இடங்களில் பல்நோக்கு ஆய்வு முகாம்களும், 19 புயல் பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் நகரில் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com