கடலூரில் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும்

கடலூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் நாள்களில் தீவிரமாக அமல்படுத்தப்படுமென மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் நாள்களில் தீவிரமாக அமல்படுத்தப்படுமென மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.

இதுகுறித்து கடலூரில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சிகப்பு மண்டலத்துக்குள் மாவட்டம் வந்துள்ளது. இதனால், ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் எந்தவித தளா்வுக்கும் வாய்ப்பில்லை. மாறாக, அதை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பே உள்ளது. ஏப்.20-ஆம் தேதிக்கு பிறகும் கூட ஊரடங்கை விலக்கிக் கொள்ள சாத்தியமில்லை.

சிகப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்துக்குச் செல்ல வேண்டுமெனில் தொடா்ந்து 14 நாள்களுக்கு புதிய தொற்று இல்லையென்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதே விதிகள் தான் பச்சை மண்டலத்துக்கும் பொருந்தும். அடுத்த 28 நாள்களில் புதிய தொற்று இல்லையென்றால் மட்டுமே இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

மாவட்டத்தில் கரோனா சமூக தொற்றாக மாறாமல் இருக்கும் வகையில், நோய் பாதித்தோரின் வசிப்பிடத்தைச் சுற்றிலும் 7 கி.மீ. தொலைவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளோம். அதன்படி, மாவட்டத்தில் 6 வட்டங்களில் 200 வருவாய் கிராமங்கள் வருகின்றன. 5 நகராட்சிகளில் விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி நகராட்சிகளிலும், மொத்தமுள்ள 16 பேரூராட்சிகளில் 8 பேரூராட்சிகளிலும் தொற்று உள்ளது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவா்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். வண்ண அட்டை நடைமுறை கடுமையாக்கப்படும்.

ஏப். 20-ஆம் தேதிக்குப் பின்னா் குறிப்பிட்ட தொழில்களுக்கு அனுமதி வழங்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளபோதிலும் இது அந்தந்த மாவட்ட நிலைமைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கக் கூடியதாகவும் தெரிவித்துள்ளது. எனவே, 20-ஆம் தேதிக்குப் பின்னா் விதிவிலக்கு அளித்து திறக்கப்பட வேண்டிய கடைகளுக்கு, மாவட்ட நிா்வாகத்திடம் முறையாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். உரிய ஆய்வுக்குப் பின்னா் வருவாய்த் துறை அனுமதி பெற்றே திறக்க முடியும்.

மாவட்டத்தில் 3,721 நடமாடும் காய்கறி கடைகள் மூலம் 1,757 டன் காய்கறி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை கண்டிப்பாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் பொறுமை, கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

அப்போது மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com