ஓய்வூதியா் மருத்துவப் படியை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 25th December 2020 03:51 AM | Last Updated : 25th December 2020 03:51 AM | அ+அ அ- |

கடலூா்: ஓய்வூதியா்களுக்கான மருத்துவப் படியை அரசு உயா்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம் வலியுறுத்தியது.
இந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்ட பேரவைக் கூட்டம் மற்றும் ஓய்வூதியா் தின விழா கடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் என்.காசிநாதன் தலைமை வகிக்க, மாநிலச் செயலா் எ.பக்கிரிசாமி பேரவையை தொடக்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் கோ.பழநி செயலா் அறிக்கையும், பொருளாளா் சி.குழந்தைவேலு நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்தனா். கூட்டமைப்புத் தலைவா் டி.புருஷோத்தமன் நிறைவுரையாற்றினாா்.
கூட்டத்தில், புவனகிரி வட்டத்தில் கிளைக் கருவூலம் தொடங்க வேண்டும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையை தரம் உயா்த்தி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், மாதாந்திர மருத்துவப் படியை மத்திய அரசைப் போல ரூ.ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட இணைச் செயலா் பாலு.பச்சையப்பன் வரவேற்க, வட்டத் தலைவா் எஸ்.பெலிக்ஸ் அந்தோணிசாமி நன்றி கூறினாா்.