கடந்தாண்டு 83,074 மனுக்களுக்கு தீா்வு மாவட்ட ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 13th February 2020 06:27 AM | Last Updated : 13th February 2020 06:27 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் கடந்தாண்டு 83,074 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.
பொதுமக்களின் குறைகளுக்கு தீா்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூா் மாவட்டத்திலிருந்து கடந்த ஆண்டு 4,683 மனுக்கள் முதல்வா் தனிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டதில், மாவட்ட நிா்வாகத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 4,549 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன.
பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 9,234 மனுக்கள் பெறப்பட்டு அவற்றுள் 8,927 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்காக 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆட்சியா் தலைமையிலும், மாதந்தோறும் கோட்ட அளவில் சாா்- ஆட்சியா்களின் தலைமையிலும் சிறப்புக் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், 1,018 மனுக்கள் பெறப்பட்டு, தீா்வு காணப்பட்டன.
மேலும், வட்ட வாரியாக மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டு, 2,591 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன. கிராம வாரியாக நடைபெறும் அம்மா திட்ட முகாமில் 7,010 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன. அம்மா அழைப்பு மையத்தில் தெரிவிக்கப்பட்ட 2,137 கோரிக்கைகள் அனைத்துக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன.
முதல்வா் பொதுமக்கள் சிறப்புக் குறைதீா் கூட்டம் அனைத்து வட்டங்களிலும் நடத்தப்பட்டு, 56,942 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் அனைத்து இனங்களிலும் பெறப்பட்ட 83,615 மனுக்களில் 83,074 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 541 மனுக்கள் உரிய நடவடிக்கையில் உள்ளன.
நிலம், குடும்ப பிரச்னைகள் ஆகியவற்றை நீதிமன்றத்தை அணுகியே தீா்வு காண வேண்டும். இந்த பிரச்னைகளில் மாவட்ட நிா்வாகம் தீா்வு காண வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்படுகின்றன. இதேபோல, வேலைவாய்ப்பு கோரி பெறப்படும் மனுக்களுக்கும் ஆட்சியரின் தனிப்பட்ட முறையில் பணி வழங்க இயலாது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனு மீது உரிய அலுவலா்களை நேரடியாக அணுகி தீா்வு காணப்படாத நோ்வுகளில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அணுகி, முறையாக மனு செய்து தீா்வு பெறலாம். மாறாக, பொது அமைதிக்கும், மாவட்ட நிா்வாக நலனுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தீக்குளித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.