என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 17th February 2020 05:27 AM | Last Updated : 17th February 2020 05:27 AM | அ+அ அ- |

கடலூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தக் கட்சியின் எம்.சேகா் தலைமையிலான பிரிவினரின் மாவட்டக்குழு கூட்டம் கடலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏ.ராஜி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலா் எம்.சேகா் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மகாரத்னா விருது பெற உழைத்திட்ட அனைத்து பொறியாளா்கள், நிரந்தர தொழிலாளா்கள், இன்கோ ஒப்பந்த தொழிலாளா்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை அன்பளிப்பாக வழங்க வேண்டும்.
என்எல்சி நிறுவனத்துக்காக வீடு, நிலம் கொடுத்தவா்களை எந்த நிபந்தனையுமின்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதென முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில், வட்டச் செயலா் ப.ஜெகரட்சகன், நகரச் செயலா் ஜி.மணிவண்ணன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் எஸ்டி.குணசேகரன், ஜி.மோகன், ஞானசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.