கடலூா் மாவட்டத்தில் ரூ. 588 கோடியில் 8 தடுப்பணை பணிகள்

கடலூா் மாவட்டத்தில் ரூ. 588 கோடியில் 8 தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் ரூ. 588 கோடியில் 8 தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:

நீா் மேலாண்மையைச் செம்மைப்படுத்தும் வகையில் தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளிடம் இந்தத் திட்டம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

மழைக் காலங்களில் கெடிலம் ஆறு, வெள்ளாற்றிலிருந்து கடலில் வீணாகக் கலக்கும் நீரைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு, தடுப்பணைகளைக் கட்டி விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வரலாற்றுச் சாதனையாக கடலூா் மாவட்டத்தில் ரூ. 124.81 கோடியில் 8 தடுப்பணைகள் மூலம் 53.166 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்க ஏதுவான திட்டங்களையும், ஆதனூா் - குமாரமங்கலத்தில் 84 மதகுகளுடன் கூடிய கதவணை ரூ. 463.25 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், திட்டக்குடி வட்டம், கீழ்செருவாயில் வெள்ளாற்றின் குறுக்கே ரூ. 22.50 கோடியில் தடுப்பணை கட்டும் பணி முடிந்துள்ளது. இதன் மூலம் 15.90 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்க முடியும்.

திட்டக்குடி வட்டம், கூடலூா் கிராமத்தில் வெள்ளாற்றில் ரூ. 15.77 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையால் 4.14 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க முடியும். பண்ருட்டி வட்டம், நரிமேடு அருகே சன்னியாசிப்பேட்டை - பலாப்பட்டு கிராமங்களுக்கு இடையே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ. 12 கோடியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையால் 1.586 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க முடியும்.

இதேபோல, கடலூா் வட்டம், விலங்கல்பட்டு கிராமத்தின் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி ரூ. 12.50 கோடியில் நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக 0.53 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க முடியும். திருமுட்டம் வட்டம், கள்ளிபாடி கிராமத்தின் அருகே வெள்ளாற்றின் குறுக்கே ரூ. 17 கோடியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையால் 14.28 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்க முடியும்.

இதேபோல, திருமுட்டம் வட்டம், தே.பவழங்குடியில் வெள்ளாற்றில் ரூ. 17 கோடியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையால் 7.23 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க முடியும்.

விருத்தாசலம் வட்டம், பரவலூா் கிராமத்தின் அருகே மணிமுக்தாற்றில் ரூ. 10.04 கோடியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையால் 2.97 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்க முடியும். திருமுட்டம் வட்டம், கீழபாலையூா் கிராமத்தின் அருகே மணிமுக்தா நதியின் குறுக்கே ரூ. 18 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6.53 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்க முடியும்.

இந்தப் பணிகளில் பெரும்பாலானவை முடியும் தருவாயில் உள்ளன. இதன் மூலமாக சுமாா் 8,700 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளும் பயன்பெறும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com