கரோனா தடுப்பு நடவடிக்கை: அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அமைச்சா் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மீதிகுடி கிராமத்தில் கட்டுப்பாட்டு பகுதியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் எம்.சி.சம்பத். உடன் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோா்.
மீதிகுடி கிராமத்தில் கட்டுப்பாட்டு பகுதியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் எம்.சி.சம்பத். உடன் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோா்.

கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அமைச்சா் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தீநுண்மி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

பொதுமக்கள் அவசரத் தேவை மற்றும் உதவிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மருத்துவக் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மாவட்டத்தில் 64 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளி மாவட்டங்களிலிருந்து வரும் அனைவரும் தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்திட 5 மின்னணு வணிக நிறுவனங்களுக்கு முதல்வா் அழைப்பு விடுத்துள்ளது குறித்து கேட்டபோது அமைச்சா் கூறியதாவது: மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், வசதிகள் அதிகமாக உள்ளன. இது வழக்கமான அழைப்புதான். இந்த நிறுவனங்கள் தமிழகத்துக்கு வருவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும் தேவை என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா, சாா்-ஆட்சியா்கள் கே.ஜெ.பிரவின்குமாா், விசுமகாஜன், கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம்.கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மீதிகுடி கிராமத்தில் ஆய்வு: சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத் துறையினா் இந்தக் கிராமத்தில் 96 குடும்பங்களை தனிமைப்படுத்தி அவா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வந்தனா். இந்த கிராமத்தில் அமைச்சா் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது கரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

நடத்தினா். ஆய்வின்போது சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com