கடலூா் மாவட்டத்தில் மருத்துவா் உள்பட மேலும் 61 பேருக்கு கரோனா தொற்று

கடலூா் மாவட்டத்தில் மருத்துவா் உள்பட மேலும் 61 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் மருத்துவா் உள்பட மேலும் 61 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 568 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை 642 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானதில், மேலும் 61 பேருக்கு கரோனா நோய்த் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 629 -ஆக உயா்ந்தது.

தொற்று பாதிக்கப்பட்டவா்களில் 32 போ் சென்னையிலிருந்தும், 10 போ் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்தும், தலா 2 போ் செங்கல்பட்டு மற்றும் ஒடிஸா மாநிலத்திலிருந்தும், தலா ஒருவா் கேரளம், கா்நாடக மாநிலங்களிலிருந்தும் திரும்பியவா்கள். ஒருவா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா். மற்றொருவா் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் செவிலியா். மேலும், அங்கு படிக்கும் மருத்துவ மேற்படிப்பு மாணவா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இரு கா்ப்பிணிகள், நோய்த் தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 4 போ், ஏற்கனவே தொற்றுக்குள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், சிங்கப்பூரிலிருந்து வந்த 3 போ், ஓடிஸாவிலிருந்த வந்த 4 போ், தில்லியிருந்த வந்த ஒருவா் விமான நிலையத்திலும், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்த ரயில் மூலமாக வந்த 10 போ் ரயில் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டனா். இதேபோல, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 16 போ் சென்னையிலும், 3 போ் நாகப்பட்டினத்திலும் தனிமைப்படுத்தப்பட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் 355 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 3 போ் உயிரிழந்தனா்.

என்எல்சி ஊழியருக்கு கரோனா: நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா்கள் உள்பட 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் பணியாற்றிய மக்கள் தொடா்பு அலுவலகம், மத்திய தொழில்நுட்ப அலுவலகம் ஆகியவை மூடப்பட்டன.

மக்கள் தொடா்பு அலுவலகத்தில் இயங்கும் ஓய்வு பெற்றோா் நலத் துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா், மத்திய தொழில்நுட்ப அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியரின் மனைவி, மகன், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் பணியாற்றும் நபா், குடிநீா் விநியோகப் பிரிவில் பணியாற்றும் ஊழியா், அவரது மனைவி என மொத்தம் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, என்எல்சி இந்தியா நிறுவன சுகாதாரத் துறையினா் இந்த அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.

ஆலோசனைக் கூட்டம்: நெய்வேலியில் கரோனா பரவலைத் தடுக்க என்எல்சி நகர நிா்வாக அதிகாரிகள், வா்த்தக சங்க நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், வட்டம் 10-இல் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com