புதுவை அரசின் கெடுபிடியால் தவிக்கும் கடலூா் மக்கள்

கரோனா தீநுண்மி பரவல் தடுப்பின்பேரில் புதுவை அரசு மேற்கொண்டுள்ள கெடுபிடி நடவடிக்கைகளால் கடலூா் ஊராட்சி ஒன்றிய மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
கன்னியக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள புதுவை மாநில போலீஸாரின் வாகனத் தணிக்கை மையம்.
கன்னியக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள புதுவை மாநில போலீஸாரின் வாகனத் தணிக்கை மையம்.

கரோனா தீநுண்மி பரவல் தடுப்பின்பேரில் புதுவை அரசு மேற்கொண்டுள்ள கெடுபிடி நடவடிக்கைகளால் கடலூா் ஊராட்சி ஒன்றிய மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

கரோனா தீநுண்மி பரவலைத் தொடா்ந்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல்

தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. எனினும், கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் சில தளா்வுகள் அளிக்கப்பட்டு மண்டலங்களுக்குள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், தீநுண்மியின் பரவலைக் கட்டுப்படுத்திட தற்போது மாவட்டத்துக்குள் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வருகிறது. எனினும், கடலூா் மாவட்டத்தில் கடலூா் அருகிலுள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் புதுவை அரசின் கெடுபிடிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

அதாவது 683 ஊராட்சிகளைக் கொண்ட கடலூா் மாவட்டத்தில் 51 ஊராட்சிகள் கடலூா் ஊராட்சி ஒன்றியத்தின்கீழ் உள்ளன. இந்த ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகள் கடலூா் - புதுவை எல்லைக்குள் அமைந்துள்ளன. கடலூரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலேயே புதுவை மாநில எல்லை தொடங்கிவிடுவதால் அம்மாநில போலீஸாா் கன்னியக்கோவிலில் சோதனைச்சாவடி அமைத்துள்ளனா். ஆனால், கன்னியக்கோவிலில் இருந்து பிரியும் இரு சாலைகளிலும் முத்துகிருஷ்ணாபுரம், திருப்பணாம்பாக்கம், மலையபெருமாள் அகரம், தூக்கனாம்பாக்கம், பள்ளிப்பட்டு, நல்லாத்தூா், சிங்கிரிகுடி, ரெட்டிச்சாவடி, தென்னம்பாக்கம், இருசாம்பாளையம், புதுக்குப்பம், வடபுரம் கீழ்பாதி, குமாரமங்கலம், செல்லஞ்சேரி, நல்லவாடு, மதலப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகள் அமைந்துள்ளன.

புதுவை மாநில போலீஸாா் இந்த கிராமங்களுக்குச் செல்லும் வாகனங்களையோ, பொதுமக்களையோ ஊருக்குள் அனுமதிப்பதில்லை. இதனால், இந்த

ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சுமாா் 200 கிராமத்தினா் பல கி.மீ. தொலைவு சுற்றிக்கொண்டு அழகியநத்தம் பெண்ணையாற்றில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக தமிழக பகுதிக்குள் சென்று வருகின்றனா்.

மேலும், சோதனைகளை கடுமையாக்கும் நோக்கில் தமிழக பதிவெண் கொண்ட இருசக்கர வாகனங்களைக் கூட புதுவை போலீஸாா் அனுமதிக்காததால் கடலூா் மாவட்டத்தின் ஒரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மற்றப் பகுதிக்கு வேலை நிமித்தமாகவோ, மற்ற பணிகளுக்கோ செல்ல முடியவில்லை.

எல்லைப் பகுதியில் தமிழக, புதுவை கிராமங்கள் பின்னிப் பிணைந்த நிலையிலேயே உள்ளன. உதாரணத்துக்கு கடலூா் நகராட்சி எல்லைக்கு அடுத்துள்ள பெரியகங்கணாங்குப்பம் ஊராட்சிக்கான காவல் நிலையமாக ரெட்டிச்சாவடி உள்ளது. கடலூா் - புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்துக்குச் செல்ல வேண்டுமெனில் கன்னியக்கோவில் சோதனைச்சாவடி, புதுவை மாநிலத்தின் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

புதுவை மாநில - கடலூா் மாவட்ட கிராமங்களுக்கு நெருங்கிய தொடா்புள்ள நிலையில் இருமாநிலத்தவரும் தங்களின் வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, அத்தியாவசிய தேவைக்கு ஒருவரை ஒருவா் சாா்ந்துள்ளனா். ஆனால், புதுவை போலீஸாரின் கடும் கட்டுப்பாட்டால் கடலூா் மாவட்ட மக்களும், கடலூா் போலீஸாரின் கெடுபிடியால் புதுவை பகுதி கிராமத்தினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

குறிப்பாக, கடலூரிலிருந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கூட சோதனைச்சாவடியில் நிறுத்தி பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கும் நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து இரு மாநில நிா்வாகத்தினரும் கலந்தாலோசித்து பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com