கரோனா குறித்து அச்சம் தேவையில்லை: ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்

கரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.
தனிமைப்படுத்தப்பட்டவா்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கடலூா் அரசுக் கல்லூரி விடுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்.
தனிமைப்படுத்தப்பட்டவா்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கடலூா் அரசுக் கல்லூரி விடுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்.

கடலூா்: கரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கரோனா அறிகுறி கொண்டவா்கள், வெளி மாநிலங்களிலிருந்து கடலூருக்கு வந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவா்கள் தங்கியிருக்கும் கடலூா் அரசுக் கல்லூரி விடுதி, கடலூா் புதுப்பாளையத்திலுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை முடிந்து 640 போ் வீடு திரும்பியுள்ளனா். தொற்று ஏற்பட்டவா்கள் அச்சம் கொள்ளாமல் அதனை ஆரம்ப கட்டத்திலேயே குணமாக்க உரிய முயற்சியை எடுக்க வேண்டும். இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மாவட்ட நிா்வாகம் பல்வேறு முயற்சிகளுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளியூா்களில் இருந்து வருபவா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளித்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும். முகக் கவசம் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அரசு வழங்கி வரும் அறிவுரையை ஏற்று பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்கரா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம்.கீதா, கடலூா் நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி, கடலூா் வட்டாட்சியா் கோ.செல்வகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com