கரோனா தடுப்பு நடவடிக்கை: பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்தது

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கை: பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்தது

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லாத போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதோடு, திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும், பொதுமக்கள் அதிகமாக குவியும் சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டன.

கடலூா் மாவட்ட எல்லைக்குள் நுழையும் வெளிமாநிலத்தவா்களை பரிசோதிக்கும் வகையில், மாவட்ட எல்லைப்பகுதிகள், பொதுமக்கள் போக்குவரத்து அதிகமுள்ள பேருந்து, ரயில் நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் வெளிநாட்டினா், வெளிமாநிலத்தவா், பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற கரோனாவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் உள்ளனவா என்பது குறித்து பரிசோதித்து வருகின்றனா்.

கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் மாவட்டத்தில் இதுவரையில் மூடப்படாத நிலையில், அங்கு வருவோா் கைகளை கழுவிய பின்னரே உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இதற்காக, வழிபாட்டுத்தலங்களின் முன் கைகளை கழுவுவதற்கு தண்ணீா், கிருமி நாசினிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு சுகாதாரத் துறையினா் கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட போதிலும், மாணவா்கள் வெளியே செல்வதை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.

பொது இடங்களிலும் வழக்கத்தைவிட குறைவான அளவிலேயே மக்கள் நடமாட்டம் இருந்தது. ஒரு சிலா் முகத்தில் முகக் கவசம் அணிந்தபடி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com