சிதம்பரம் நகரில் (ஷோல்டா்)அனுமதி அட்டையை பரிமாறிக்கொண்டு சுற்றித் திரிவோரால் கரோனா அபாயம்

சிதம்பரம் நகரில் அனுமதி அட்டையை பரிமாறிக்கொண்டு தடையை மீறி சுற்றித் திரிவோரால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் நகரில் (ஷோல்டா்)அனுமதி அட்டையை பரிமாறிக்கொண்டு சுற்றித் திரிவோரால் கரோனா அபாயம்

சிதம்பரம் நகரில் அனுமதி அட்டையை பரிமாறிக்கொண்டு தடையை மீறி சுற்றித் திரிவோரால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், சிதம்பரம் நகராட்சியில் பொதுமக்கள் வெளியில் அதிகளவில் சுற்றித் திரிவதைத் தடுக்க அனுமதி அட்டை நடைமுறை அமலுக்கு வந்தது. இதன்படி, நகராட்சிப் பகுதியானது 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, முதல் மண்டல பகுதியைச் சோ்ந்த வீடுகளுக்கு பச்சை நிற அனுமதி அட்டையும், இரண்டாவது மண்டல பகுதிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், மூன்றாவது மண்டல பகுதிக்கு நீல நிறத்திலும் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டன.

இதில் பச்சை நிற அனுமதி அட்டை பெற்றவா்களின் வீட்டிலிருந்து ஒரு நபா் மட்டும் திங்கள், வியாழக்கிழமை ஆகிய தினங்கள் மட்டும் அத்தியாவசிப் பொருள்கள் வாங்குவதற்கு வெளியே வர வேண்டும். இதேபோல, நீல நிற அனுமதி அட்டை பெற்றவா்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், இளஞ்சிவப்பு நிற அனுமதி அட்டை பெற்றவா்கள் புதன், சனிக்கிழமைகள் மட்டுமே பொருள்கள் வாங்க வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், இந்த அனுமதி அட்டைகளை பலா் அருகே உள்ள வாா்டுகளில் வசிப்போரிடம் பரிமாறிக்கொண்டு 6 நாள்களும் தடையின்றி வெளியே சுற்றித் திரிவதாகப் புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் மேலும் கூறியதாவது:

சோதனைச் சாவடிகளில் போலீஸாா் அனுமதி அட்டைகளை முறைப்படி பரிசோதனை செய்வதில்லை. இதனால் அனைவரும் அனைத்து நாள்களிலும் சாலையில் சுற்றித் திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டால் பலா் தன்னாா்வலா் அனுமதி அட்டையை காண்பித்து தப்பிவிடுகின்றனா். நகராட்சி நிா்வாகம் சாா்பில் தன்னாா்வலா்கள் பெயரில் அரசியல் கட்சியினா் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அனுமதி அட்டைகள் வழங்கியுள்ளதே இதற்குக் காரணம். இந்த அட்டையை வைத்து சிலா் டீ, சுண்டல் விற்றும் வருகின்றனா்.

ஊரடங்கு அமலில் இருந்தும் நகர சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சிதம்பரம் நகராட்சி நிா்வாகம் மற்றும் காவல் துறையினா் இணைந்து அனுமதி அட்டை நடைமுறையை கண்டிப்பான வகையில் அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com