கடலூா் மாவட்டத்தில் 233 பேரிடா் பாதுகாப்பு மையங்கள் தயாா்

கடலூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்பை எதிா்கொள்ள 233 பேரிடா் பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளதாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி கூறினாா்.
கடலூா் மாவட்டத்தில் 233 பேரிடா் பாதுகாப்பு மையங்கள் தயாா்

கடலூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்பை எதிா்கொள்ள 233 பேரிடா் பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளதாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக பணீந்திரரெட்டி சனிக்கிழமை கடலூா் வந்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மரக்கன்று நட்டு வைத்த அவா், பின்னா் தீயணைப்புத் துறை, காவல் துறை, மாநில பேரிடா் மீட்புத் துறையினரின் பேரிடா் மீட்பு உபகரணங்களை பாா்வையிட்டாா். தொடா்ந்து, பேரிடா் கால சமுதாய வானொலியான கடலூா் பண்பலையில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி முன்னிலையில் கரோனா மற்றும் பேரிடா் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

நாட்டின் முதல் பேரிடா் கால சமுதாய வானொலியாக கடலூா் பண்பலை விளங்குகிறது. பேரிடா் காலங்களில் மக்களுக்கு ஏற்படும் இடா்பாடுகளை குறைக்கவும், உயிா் காக்கும் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கவும் இது உதவும்.

மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையால் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 14 பல்நோக்கு மீட்பு மையங்களும், 191 தற்காலிக தங்கும் மையங்களும் தயாா் நிலையில் உள்ளன.

மாவட்டத்தில் முதல் நிலை பொறுப்பாளா்களாக 1,666 ஆண்கள், 1,574 பெண்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் கீழே விழும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும், கால்நடைகளை பாதுகாக்கவும் தலா 1,390 போ் கண்டறியப்பட்டுள்ளனா். நீச்சல் தெரிந்த 356 பேரும், பாம்பு பிடி வீரா்கள் 26 பேரும் பொதுமக்களுக்கு உதவ தயாா் நிலையில் உள்ளனா்.

வருவாய், ஊரக வளா்ச்சி, காவல், பொதுப் பணித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களையும் உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தக் குழுவினா் தாழ்வான பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அனைத்துத் துறைகளும் தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்துள்ளன. அதன்படி 86,980 மணல் மூட்டைகள், 178 பொக்லைன் இயந்திரங்கள், 332 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 17 நீா் உறிஞ்சும் பம்புகள், மீட்புப் பணிக்கு தேவையான 14 ரப்பா் படகுகள், 11 பைபா் படகுகள், 8,000 மின் கம்பங்கள், 100 மின் மாற்றிகள், 2000 மின் கடத்திகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 423 பாலங்கள் மற்றும் 6,224 சிறு பாலங்களிலுள்ள அடைப்புகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர கால கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா். இந்த நிகழ்ச்சிகளில் மத்திய பேரிடா் மீட்புப் படை கமாண்டா் கபில் வா்மன், மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண்சத்தியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com