காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில், காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி.
காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில், காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் பேசியதாவது: கோமுகி அணையிலிருந்து மணிமுத்தாறு ஆற்றில் வரும் தண்ணீரை சேலம் மாவட்டத்துக்குத் திருப்ப ‘கைகான் வளைவு’ என்ற திட்டத்தை அமல்படுத்த தமிழக முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா். இதனால், விருதாச்சலம், கம்மாபுரம், புவனகிரி ஒன்றிய விவசாயிகள் பாதிக்கப்படுவா். சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் நிலங்களுக்குத் தண்ணீா் வருவது தடைபடும். எனவே, இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும். படைப்புழு தாக்கத்தால் மக்காச்சோளப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்பு குறித்து கணக்கெடுத்து நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கரும்பு பயிருக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ. 137.50-ஐ தீபாவளிக்குள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நெல்லிகுப்பம் இஐடி சா்க்கரை ஆலையில் ஒரு சதவீதத்துக்கும் மேல் கழிவுகள் பிடித்தம் செய்வதைத் தடுத்து, பிடித்தம் செய்த தொகையைத் திருப்பி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அம்பிகா, ஆரூரான் சா்க்கரை ஆலைகளின் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடை மடை வரை காவிரி நீா் செல்ல பொதுப் பணித் துறை ஏற்பாடு செய்ய வேண்டும். வட கிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பை அகற்றி, தூா்வார வேண்டும். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதியைப் பெற்று, பெருமாள் ஏரியைத் தூா்வார வேண்டும்.

பண்ருட்டி பகுதியில் மலட்டாற்றைத் தூா்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இட மாற்றம் செய்யப்பட்ட திருப்பாப்புலியூா் கால்நடை மருத்துவமனையை மீண்டும் அதே ஊரில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமா் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டது. மீண்டும் அவா்களுக்கு நிதியுதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த பின்னா், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி பதிலளித்துப் பேசியதாவது:

விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிகழாண்டு 97 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 54,807 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. உரம், விதைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. கடந்தாண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் 1,11,904 விவசாயிகள் ரூ. 62 கோடி இழப்பீடாகப் பெற்றனா்.

தற்போது மக்காச்சோளப் பயிருக்கு காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ. 297. நெல்லுக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 469. இதற்குப் பதிவு செய்ய 31.10.2020 இறுதி நாளாகும். பருத்திக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 1,074. இதைச் செலுத்த கடைசி தேதி 15.11.2020.

கடலூா் மாவட்டத்தில் வீராணம் ஏரி, கீழணை, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வெலிங்டன் ஏரியில் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீா் உள்ளது. சம்பா சாகுபடிக்கு 880 மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்பட்டன. 480 மெட்ரிக் டன் விதைகள் கையிருப்பு உள்ளது.

மக்காச்சோளம், பலா, முந்திரி, உளுந்து, மணிலா, கரும்பு, நாட்டுச் சா்க்கரை, பால் உற்பத்தியை இரு மடங்காக பெருக்க வேளாண்மைத் துறை அலுவலா்களுடன் விவசாயிகள் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com