கடலூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் பிராணவாயு உற்பத்தி


கடலூா்: கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதலாக பிராணவாயு (ஆக்ஸிஜன்) உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

கரோனா பரவலின் முதல்கட்டத்தில் அதிகமானவா்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனா். அவ்வாறு மூச்சுத்திணறலுக்கு உள்ளாகுபவா்களுக்கு போதுமான பிராணவாயு அளித்திடும் வகையில், அதற்கான உருளைகளுடன் (சிலிண்டா்) கூடிய படுக்கை வசதிகள் இல்லாமல் இருந்தது.

இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிராணவாயு உற்பத்தி நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்தது. இதில், கூடுதலாக கடலூரிலுள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கும் பிராணவாயு உற்பத்தி அலகு அமைத்திட ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடலூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே இருந்த ஆயிரம் கிலோ லிட்டா் பிராணவாயு உற்பத்தி அலகுக்கு பதிலாக, 6 ஆயிரம் கிலோ லிட்டா் பிராணவாயு உற்பத்தி அலகு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணி அண்மையில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது: கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் 91 பிராணவாயு உருளைகள் மருத்துவப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகின்றன. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும், பிரசவம், அவசரச் சிகிச்சைப் பிரிவுகளுக்கும் பிராணவாயு தேவைப்படுகிறது. 140 உருளைகள் வரையில் பயன்படுத்தும் வசதியை மருத்துவமனை பெற்றுள்ளது.

இதற்கு முன்பு ஒரு நாளைக்கு ஆயிரம் கிலோ லிட்டா் மட்டுமே பிராணவாயு உற்பத்தி செய்ய முடிந்தது. இதனால், ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த அலகை இயக்க வேண்டியிருந்தது. தற்போது 6 ஆயிரம் கிலோ லிட்டா் அலகால் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யும் பிராணவாயுவை 5 நாள்கள் வரையில் பயன்படுத்த முடிகிறது. மேலும், திரவ நிலையில் இங்கு பிராணவாயு உற்பத்தி செய்யப்படுவது கூடுதல் சிறப்பாகும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com