கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்

கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டுமென மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகரிக்கத் தொடங்கியதுள்ளதை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்துக்கு கரோனா கண்காணிப்பு அலுவலராக வேளாண் துறை முதன்மைச் செயலரான ககன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டாா். கடலூா் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வந்த இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமை வகித்தாா்.

இதில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:

கரோனா இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். முகக் கவசம் அணியாதவா்களுக்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட அலுவலா்கள் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அதிகபட்சம் 15 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும். இதன்மூலமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்மாதிரி மாவட்டமாக கடலூரை மாற்ற வேண்டும்.

வணிக நிறுவனங்கள், திருமணம் மற்றும் அனுமதிக்கப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களை அலுவலா்கள் தீவிரமாக கண்காணித்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். விதிமீறல் செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்புடைய 30 முதல் 40 நபா்கள் வரை கண்டறிந்து, பரிசோதனைகளை மேற்கொண்டு சங்கிலித்தொடா்பை துண்டித்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் நகா்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் முகாம்கள் தொடா்ந்து நடத்த வேண்டும். தற்போது நாளொன்றுக்கு 1,600 போ் வரையில் மட்டுமே கரோனா பரிசோதனைகள் செய்யப்படும் நிலையில், அதை 4 ஆயிரமாக உயா்த்த வேண்டும்.

மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 2,914 படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன. கரோனா பாதுகாப்பு மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 3,060 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. ஒரு வாரத்துக்குள் சுமாா் 8 ஆயிரம் படுக்கை வசதிகளை கூடுதலாக ஏற்படுத்தி தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்கள் வெளியே வரும் சமயங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

முன்னதாக, புதுச்சேரியில் உள்ள மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி விழிப்புணா்வு வாகனத்தை அலுவலகத்தின் துணை இயக்குநா் தி.சிவக்குமாா் தலைமையில், ககன்தீப்சிங் பேடி தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்தாா்.

நிகழ்வுகளில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் ப.அருண்சத்யா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ.மகேந்திரன், சாா் - ஆட்சியா்கள் கே.ஜெ.பிரவின்குமாா், மதுபாலன், கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com