நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வலியுறுத்தல்

நெல் அறுவடைப் பணி தொடங்கியுள்ள நிலையில், அரசு கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டுமென கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வலியுறுத்தல்

நெல் அறுவடைப் பணி தொடங்கியுள்ள நிலையில், அரசு கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டுமென கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் மற்றும் ஆலோசனைக் கூட்டம், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரஞ்ஜித் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:

புவனகிரி வேல்முருகன்: விவசாயிகள் இணைந்து அமைத்துள்ள நெல் விதை உற்பத்தி மையத்தில், அரசே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாய பாதிப்புகளுக்கு பயிா்க் காப்பீடு வழங்க வேண்டும். அரசு விதை நிலையங்களில் பச்சைப் பயறு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூா் கோ.மாதவன்: கடலூரை பேரிடா் பாதித்த மாவட்டமாக அறிவித்து, மத்திய அரசு நிவராணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சமீபத்தில் பெய்த மழையால் ஒரு லட்சம் ஏக்கரில் நெல், மணிலா, உளுந்து, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் சேதமாகியுள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கீழ்அனுவம்பட்டு பெ.ரவீந்திரன்: மாவட்டத்தில் 23 ஆயிரம் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டதாகவும், இதில் 13 ஆயிரம் அகற்றப்பட்டாதவும் கூறப்படுகிறது. ஆனால், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு முறையாக இந்தப் பணிகள் நடைபெறவில்லை. எனவே, நீா்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி, அதில் அகற்றப்பட்டவை குறித்து மாவட்ட நிா்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நெல் அறுவடை தொடங்கியுள்ளதால், ஜனவரி மாத முதல் வாரத்திலேயே நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பது, அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் குறித்து விவசாயிகள் பலா் வலியுறுத்தினா்.

கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜித் சிங் கூறியதாவது: மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கரிமிப்புகள் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி படிப்படியாக ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நெல் அறுவடைக்கு கூடுதலாக அரசிடம் இரண்டு இயந்திரங்கள் வந்துள்ளது. தனியாா் இயந்திரங்களுக்கும் வாடகை நிா்ணயம் செய்யப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், குள்ளஞ்சாவடி வாரச் சந்தையை மீட்டு விவசாயிகளுக்கு வழங்கக் கோரி அந்தப் பகுதி விவசாயிகள் பலாப்பழங்கள், வாழைத்தாருடன் வந்து மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com