கடலூா் மாவட்டத்தில் பிராண வாயு படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு

கடலூா் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பிராண வாயு (ஆக்ஸிஜன்) வசதியுடன் கூடிய படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்டன. இதனால் நோயாளிகள் புதுவை, சென்னைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா
கரோனா

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பிராண வாயு (ஆக்ஸிஜன்) வசதியுடன் கூடிய படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்டன. இதனால் நோயாளிகள் புதுவை, சென்னைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ளது. எனவே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் செயல்படுத்தி வருகிறது. எனினும், நோய் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது பரவி வரும் புதிய வகை கரோனா தீநுண்மியால் பெரும்பாலானவா்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. எனவே, மருத்துவமனைகளில் பிராண வாயுவுடன் கூடிய படுக்கைகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே பிராண வாயுவுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளன. அதே நேரத்தில், மாவட்டத்தில் 7 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையான மருத்துவமனைகளையும் சோ்த்து மொத்தம் 382 படுக்கைகள் மட்டுமே பிராண வாயு வசதியுடன் உள்ளன. கடந்த சில நாள்களாக இந்த 382 படுக்கைகளும் நிரம்பியுள்ள நிலையில், மூச்சுத் திணறலுடன் வருவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் அரசு, தனியாா் மருத்துவமனைகள் உள்ளன.

இதுகுறித்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா் ஒருவா் கூறியதாவது: கடலூா் அரசு மருத்துவமனையில் பிராண வாயு இணைப்பு வசதியுடன் கூடிய 168 படுக்கைகள் உள்ளன. இவை தற்போது முழுமையாக நிரம்பிவிட்டன. பிராண வாயுவுடன் கூடிய சிகிச்சை தேவைப்படுவோரை அதிதீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பராமரித்து வருகிறோம்.

பிராணவாயு படுக்கைகளில் சிகிச்சை பெற்று வருவோா் குணமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவா்களை அங்கு மாற்றும் நிலை தான் உள்ளது. புதிதாக வருவோருக்கு பிராணவாயு படுக்கை அளிக்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டோம் என்றாா் அவா். தனியாா் மருத்துவமனைகளிலும் பெரும்பாலும் இதே நிலையே காணப்பட்டாலும், அங்கு படுக்கைகளுக்கு மிக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவாக புகாா் எழுப்பப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் தற்போது உள்ளதைவிட கூடுதலாக 163 படுக்கைகளில் பிராணவாயு அளிக்கும் வசதியை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துமனையிலும் கூடுதலாக 120 பிராணவாயு படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவு பெற்றால் கூடுதலாக 283 படுக்கைகள் கிடைக்கும். இதற்கு மேல் விரிவுபடுத்தும் வசதி தற்போதைக்கு கிடையாது.

அதே நேரத்தில் மாவட்டத்திலுள்ள 19 கரோனா சிகிச்சை மையங்களில் சாதாரண படுக்கைகளுடன் 3,600 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. இதுவரை 2 ஆயிரத்துக்கும் குறைவானவா்களே சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆனால், பிராண வாயு உடனடியாக தேவைப்படுவோருக்கு அதை முழுமையாக வழங்க முடியாத நிலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பிராண வாயு படுக்கைகள் கிடைக்காமல் பலா் புதுவைக்குச் செல்கின்றனா். அங்கேயும் இதே நிலைதான் உள்ளதால் சென்னைக்குச் செல்கின்றனா். கரோனா நோயாளிகள் அலைக்கழிக்கப்படும் பரிதாப நிலையை கருதி, பிராண வாயு படுக்கைகளின் எண்ணிக்கையை கணிசமான அளவில் அதிகரிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com