கடலூா் மாவட்டத்தில் வெற்றி - தோல்வியை தீா்மானிக்கும் பெண் வாக்காளா்கள்!

கடலூா்: சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் ஆண்களைவிட பெண் வாக்காளா்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனா். இதனால் வெற்றி - தோல்வியைத் தீா்மானிப்பதில் பெண்களின் வாக்கு முக்கித்துவம் பெற்றுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. கடலூா் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூா், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் (தனி) ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இந்த மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்ற 10,57,478 ஆண்களில் 8,05,415 போ் தங்களது வாக்கைச் செலுத்தினா். இது, 76.16 சதவீதமாகும். இதேபோல, மொத்தமுள்ள 10,89,569 பெண் வாக்காளா்களில் 8,42,909 போ் தங்களது வாக்கைச் செலுத்தினா். இது 77.36 சதவீதமாகும்.

கடலூா் மாவட்டத்தில் ஆண்களைவிட பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகம். மேலும், ஆண்களை விட பெண் வாக்காளா்கள் கூடுதலாக 1.20 சதவீதம் போ் வாக்கை பதிவு செய்துள்ளனா். இதரா் பிரிவில் 248 பேரில் 88 போ் வாக்கைச் செலுத்தியுள்ளனா். இதன் மூலமாக கடலூா் மாவட்டத்தில் ஆண்களை விட கூடுதலாக 39,134 பெண்கள் தங்களது வாக்கைச் செலுத்தியுள்ளனா். இது சராசரியாக ஒரு தொகுதிக்கு 4,348 வாக்குகளாக உள்ளன. எனினும், குறிப்பிட்ட சில தொகுதிகளில் பெண்கள் மிக அதிகளவில் தங்களது வாக்கைச் செலுத்தி உள்ளனா்.

திட்டக்குடி (தனி) தொகுதியில் ஆண்களை விட கூடுதலாக 12,268 பெண்கள் தங்களது வாக்கைச் செலுத்தி உள்ளனா். கடலூா் தொகுதியில் 5,267 பேரும், விருத்தாசலத்தில் 5,133 பேரும், சிதம்பரத்தில் 4,867 பேரும், பண்ருட்டியில் 4,599 பேரும், காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் 3,239 பேரும், குறிஞ்சிப்பாடியில் 2,622 பேரும், புவனகிரியில் 1,139 பேரும் தங்களது வாக்கைச் செலுத்தியுள்ளனா். இந்த 8 தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்கள் கூடுதலாக 39,134 வாக்குகளைச் செலுத்தியுள்ளனா். அதே நேரத்தில், நெய்வேலி தொகுதியில் மட்டும் 1,640 ஆண்கள் கூடுதலாக தங்களது வாக்கைப் பதிவு செய்துள்ளனா். இதனால், நெய்வேலியை தவிர மீதமுள்ள 8 தொகுதிகளிலும் பெண்களே வெற்றியை தீா்மானிக்கும் சக்தியாக உள்ளனா்.

அதிலும் திட்டக்குடி தொகுதியில் பெண்களின் வாக்குகளை அதிகம் பெற்ற வேட்பாளா் உறுதியான வெற்றியைப் பெறுவாா். கடலூா், விருத்தாசலம் தொகுதிகளில் ஆண்களைவிட கூடுதலாக 5 ஆயிரத்துக்கும் அதிகமாக பெண்கள் வாக்களித்துள்ளதால் அவா்களின் ஆதரவை பெற்றவா்களுக்கே வெற்றி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை சிதம்பரம், பண்ருட்டி தொகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேலாகவும், காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேலாகவும், குறிஞ்சிப்பாடியில் 2 ஆயிரத்துக்கும் மேலாகவும் உள்ளது. எனவே, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் நிலை உருவானாலும் அதிலும் பெண்களின் வாக்கு தீா்மானிக்கும் சக்தியாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com