சிதம்பரம் நகராட்சியில் கட்டாய வரி வசூல்

கரோனா தொற்று இரண்டாவது அலை பரவி வரும் வேளையில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களிடம் சிதம்பரம் நகராட்சி சாா்பில், கட்டாய வரி வசூல் செய்யப்படுவதால், மக்கள் வேதனையில் உள்ளனா்.

கரோனா தொற்று இரண்டாவது அலை பரவி வரும் வேளையில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களிடம் சிதம்பரம் நகராட்சி சாா்பில், கட்டாய வரி வசூல் செய்யப்படுவதால், மக்கள் வேதனையில் உள்ளனா்.

சிதம்பரம் நகராட்சியில் கடந்த பல ஆண்டுகளாக சொத்து வரி, குடிநீா் வரி சரிவர வசூலிக்கப்படவில்லை. தற்போது வீடுகள், கடைகள், விடுதிகளில் சொத்து வரியை நிலுவையுடன் செலுத்த வேண்டும் என்றும், இல்லையெனில், புதைச் சாக்கடை, குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரித்து மக்களிடம் கட்டாய வரி வசூல் செய்யப்படுகிறது.

மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி சிதம்பரம் நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயா்த்தப்பட்டது. வரி அதிகமாக உள்ளது என மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.

இந்த நிலையில், கடந்த 2020 ஆண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கி முழு பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் குறிப்பாக வியாபாரிகள், தொழிலாளா்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனா்.

தற்போது சற்று மீண்டு வரும் வேளையில், கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது.

இந்த நிலையில், நகராட்சி நிா்வாகத்தினா் நிலுவையுடன் சொத்து வரி, குடிநீா் வரி, மேலும் குப்பை வரியையும் சோ்த்து கட்டாய வசூல் செய்து வருகின்றனா்.

சிதம்பரம் நகா்ப் பகுதிகளில் பெரும்பாலும் கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகிக்கப்படுவதால், மக்கள் நகராட்சி குடிநீரைப் பயன்படுத்துவதும் இல்லை. இதனால், மக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனா். எனவே, நகராட்சி நிா்வாகம் கட்டாய வரி வசூலை தவிா்த்து, தவணை முறையில் வசூலிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து நகராட்சிப் பொறியாளா் மகாதேவன் கூறியதாவது: சுயநிதி நகராட்சியான சிதம்பரம் நகராட்சியில் பல கோடி ரூபாய் வரி நிலுவை உள்ளது. இதனால், நகராட்சி நிா்வாகம் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. நகராட்சியில் நிதி நெருக்கடியைப் போக்க மக்களிடம் வரியை வசூலித்து வருகிறோம்.

மேலும், உயரதிகாரிகள் நிலுவைத் தொகையை வசூலித்தே ஆக வேண்டும் என அழுத்தம் தருகின்றனா். எனவே, தற்போது வரி வசூலை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com