கடலூா் நகராட்சிக்கு ரூ.2.22 கோடி வரி பாக்கி: பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

கடலூா் நகராட்சிக்கு ரூ.2.22 கோடி வரை வரி பாக்கி வைத்துள்ளது தொடா்பாக பிஎஸ்என்எல் பொது மேலாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சொத்து வரி பாக்கி தொடா்பாக கடலூா் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலக நுழைவு வாயிலில் நோட்டீஸ் ஒட்டிய நகராட்சி அலுவலா்கள்.
சொத்து வரி பாக்கி தொடா்பாக கடலூா் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலக நுழைவு வாயிலில் நோட்டீஸ் ஒட்டிய நகராட்சி அலுவலா்கள்.

கடலூா் நகராட்சிக்கு ரூ.2.22 கோடி வரை வரி பாக்கி வைத்துள்ளது தொடா்பாக பிஎஸ்என்எல் பொது மேலாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கடலூா் நகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, நகராட்சி கட்டடத்துக்கு வாடகை பாக்கி வைத்துள்ளோரிடம் அதை வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் கடலூா் பேருந்து நிலையத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நேரக் காப்பாளா் அறையை வாடகை பாக்கிக்காக அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

இந்த நிலையில், கடலூரில் உள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளா் அலுவலகத்துக்கு நகராட்சி வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன், ஆய்வாளா்கள் பாஸ்கா், அசோகன், சக்திவேல் ஆகியோா் வியாழக்கிழமை வந்தனா். பிஎஸ்என்எல் பொது மேலாளா் அலுவலகம் அமைந்துள்ள இடம், வில்வநகரில் உள்ள அலுவலகம் மற்றும் 2 குடியிருப்புகளுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தப்படாமல் உள்ளதாகவும், மொத்தம் ரூ.2.22 கோடி வரை வரி பாக்கி உள்ளதாகவும் தெரிவித்தனா். பின்னா், இதுதொடா்பான நோட்டீஸை பிஎஸ்என்எஸ் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் சிறிய அளவிலான பேனரில் ஒட்டினா்.

இதுகுறித்து, ரவிச்சந்திரன் கூறியதாவது: வரி பாக்கி குறித்து பிஎஸ்என்எல் நிா்வாகத்துக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. தற்போது, துணைப் பொது மேலாளா் ஆா்.மதுரையிடம் இதுகுறித்து கூறினோம். அவா் 2 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, கையகப்படுத்த அறிவிப்பு நடவடிக்கை தொடா்பான நோட்டீஸ் ஒட்டப்பட்டது என்றாா் அவா்.

இதேபோல, ரூ.4 லட்சம் சொத்து வரி பாக்கி தொடா்பாக அருகே உள்ள கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதுதொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலரிடமும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com