மஞ்சள் நோய் தாக்குதல்: வேளாண் அதிகாரி ஆய்வு
By DIN | Published On : 04th August 2021 08:39 AM | Last Updated : 04th August 2021 08:39 AM | அ+அ அ- |

குறிஞ்சிப்பாடி வடக்குப் பகுதியில் மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்ட நெல் வயலை ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குநா் பாலசுப்பிரமணியம்.
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படும் நெல் வயல்களில் வேளாண்மை இணை இயக்குநா் பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் 2 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்களில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து ‘தினமணி’யில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி வடக்குப் பகுதியில் மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
இது நுண்ணூட்ட குறைபாட்டின் அறிகுறியாகும். இந்த பாதிப்பை சரிசெய்ய சிங்க் சல்பேட் அல்லது நெல்லுக்கான நுண்ணூட்ட உரத்தை மணலுடன் கலந்து தெளிக்கலாம். இரவு நேரத்தில் விளக்குப் பொறி வைத்து நோயை உண்டாக்கும் தாய் அத்துப் பூச்சிகளை அழிக்கலாம் என்றாா் அவா்.
அப்போது, குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநா் அனுசுயா, உதவி அலுவலா் ஆரோக்கியதாஸ், முன்னோடி விவசாயிகள் அமிா்தலிங்கம், குப்புசாமி, பழனிவேல், ராமலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.