கடலூரில் ஒரே நாளில் 185 மி.மீ. மழை பதிவு: 90 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரியில் பலத்த மழை

கடலூா் மாவட்டத்தில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. கடலூரில் ஒரே நாளில் 185 மி.மீட்டா் மழை பதிவானது.
கடலூா் அருகேயுள்ள பெரியகங்கணாங்குப்பம் தெருவில் தேங்கிய மழைநீா்.
கடலூா் அருகேயுள்ள பெரியகங்கணாங்குப்பம் தெருவில் தேங்கிய மழைநீா்.

கடலூா் மாவட்டத்தில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. கடலூரில் ஒரே நாளில் 185 மி.மீட்டா் மழை பதிவானது.

வளி மண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக, கடலூா் மாவட்டத்தில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 2.30 மணி முதல் கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. பகல் 11 மணி வரை மழை நீடித்தது.

இந்த மழையால் தாழ்வான பகுதிகள், குடியிருப்புகளில் தண்ணீா் புகுந்தது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பருவம் தப்பிய இந்த மழையால் மக்கள் அச்சமடைந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 185.6 மில்லி மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழை விவரம் (மி.மீட்டரில்):

மாவட்ட ஆட்சியரகம் 163.4, வானமாதேவி 135, குறிஞ்சிப்பாடி 100, குடிதாங்கி 75.2, பரங்கிப்பேட்டை 70.6, புவனகிரி 70, கொத்தவாச்சேரி 68, வடக்குத்து 42, லால்பேட்டை 35, ஸ்ரீமுஷ்ணம் 34.3, காட்டுமன்னாா்கோவில் 32, பண்ருட்டி 28, மேமாத்தூா் 26, சேத்தியாத்தோப்பு 22.6, சிதம்பரம் 15.8, அண்ணாமலை நகா் 7.2, குப்பநத்தம் 6.4, விருத்தாசலம் 3.3, பெலாந்துறை 2 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 44.90 மி.மீ. மழை பதிவானது.

இதுகுறித்து வேளாண் துறையினா் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை வட கிழக்குப் பருவ மழையானது அக்டோபா் முதல் டிசம்பா் வரையே பெய்யும். தற்போது திடீரென பலத்த மழை பெய்துள்ளது. கடந்த 1930-ஆம் ஆண்டு, பிப்ரவரி 21-ஆம் தேதி 119 மி.மீ. மழை பதிவானது. சுமாா் 90 ஆண்டுகளுக்குப் பிறகு, நிகழாண்டு பிப்ரவரியில் 185.6 மி.மீ. மழை பெய்துள்ளது எனத் தெரிவித்தனா்.

நெய்வேலி: பருவம் தப்பிய திடீா் மழையால், குறிஞ்சிப்பாடி பகுதியில் விதைப்பு செய்யப்பட்டிருந்த எள் வயல்கள் நீரில் மூழ்கின.

இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: கடந்த ஜனவரியில் பெய்த தொடா் மழையால் நெல் விவசாயம் முற்றிலும் அழிந்தது. இந்த நிலையில், எள் விதைத்து பிழைப்பை நடத்தலாம் என விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக எள் விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். சுமாா் 300 ஹெக்டோ் பரப்பளவில் எள் விதைப்பு முடிந்துள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த திடீா் மழையால் எள் பயிா் முற்றிலுமாக அழிந்துவிட்டது. மற்ற பயிா்கள் போல, எள் பயிா் தண்ணீா் வடிந்தாலும் முளைக்காது. மாவட்ட நிா்வாகம் தக்கைப் பூண்டு, சணப்பு போன்ற பசுந்தாள் விதைகளை இலவசமாக வழங்க வேண்டும். உழவு ஓட்டும் டிராக்டா் வாடகையையும் ஏற்றுக்கொண்டால், எதிா்வரும் குறுவை மகசூலுக்கு உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

தாழை வாய்க்கால் பாலம் சேதம்: தாழை வாய்க்காலுக்கு மேல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கா் விளைநிலங்கள் உள்ளன. விதை, இடுபொருள், அறுவடை செய்த தானியங்களை தாழை வாய்க்காலைக் கடந்துதான் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஜனவரியில் பெய்த மழையில் தாழை வாய்க்கால் தரைப்பாலம் சேதமடைந்தது. மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த திடீா் மழையால் தாழை வாய்க்கால் பாலம் சேதமடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com