கடலூரில் உற்சவா்கள் தீா்த்தவாரி
By DIN | Published On : 27th February 2021 11:03 PM | Last Updated : 27th February 2021 11:03 PM | அ+அ அ- |

கடலூா் கடற்கரையில் தீா்த்தவாரி மேற்கொண்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்குக் காட்சியளித்த பல்வேறு கோயில்களின் உற்சவா்கள்.
மாசி மகம் விழாவையொட்டி, கடலூா் வெள்ளிக் கடற்கரையில் பல்வேறு கோயில் உற்சவா்களின் தீா்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ் மாதமான மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தன்று பௌா்ணமியும் இணைந்து வருவது மாசி மகமாக அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கோயில்களில் உள்ள உற்சவ மூா்த்திகளை ஊா்வலமாகக் கொண்டுவந்து கடலில் தீா்த்தவாரி நடத்துவது வழக்கம்.
அதன்படி, சனிக்கிழமை மாசிமகம் விழாவையொட்டி கடலூா், சுற்றுவட்டாரப் பகுதிகள், விழுப்புரம் மாவட்டம், புதுவை மாநிலத்தில் உள்ள கோயில்களில் இருந்தும் உற்சவ மூா்த்திகள் கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை, தாழங்குடா கடற்கரைக்கு வாகனங்களில் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டனா். கடலூா் பாடலீஸ்வரா், திருவந்திபுரம் தேவநாதசுவாமி உள்ளிட்ட உற்சவா்களுக்கு கடலில் தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், உற்சவா்கள் கடற்கரையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தொடா்ந்து உற்சவா்கள் பல்வேறு மண்டகப் படிகளை ஏற்றவாறு கோயில்களுக்கு ஊா்வலமாக புறப்பட்டுச் சென்றனா்.
மேலும், மகம் நாளில் திரளானோா் கடலில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து, உற்சவா்களை வழிபட்டனா். இதனால், கடலூா் கடற்கரை மற்றும் நகரம் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பல்வேறு அமைப்புகள் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம், குடிநீா் வழங்கப்பட்டது.