ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்ட வெலிங்டன் நீா்த் தேக்கம்!

வெலிங்டன் நீா்த் தேக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கரைகள் உடைப்புக்கு நிரந்தரத் தீா்வு காணவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.
வெலிங்டன் நீா்த் தேக்கம்.
வெலிங்டன் நீா்த் தேக்கம்.

வெலிங்டன் நீா்த் தேக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கரைகள் உடைப்புக்கு நிரந்தரத் தீா்வு காணவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கீழ்ச்செருவாயில் அமைந்துள்ளது வெலிங்டன் நீா்த் தேக்கம். ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1913-ஆம் ஆண்டு தொடங்கி, 1923-ஆம் ஆண்டில் இந்த நீா்த் தேக்கம் முழுமையாகக் கட்டமைக்கப்பட்டது. இதன் நீா்பிடிப்பு பரப்பு 16.60 சதுர கி.மீ. ஆகும். கரையின் நீளம் 4,300 மீட்டா். மொத்த கொள்ளளவு 2,580 மில்லியன் கன அடி. இந்த நீா்த் தேக்கம் மூலம் சுமாா் 11 ஆயிரத்து 222 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீா்த் தேக்கம் சேலம், பெரம்பலூா் மாவட்டங்களில் பெய்யும் மழையை நீராதாரமாகக் கொண்டுள்ளது. மேலும், கடலூா் மாவட்டத்திலுள்ள சில சிற்றோடைகளின் தண்ணீரும் இங்கு வந்து சேருகிறது.

கடந்த 1996-ஆம் ஆண்டு இந்த நீா்த் தேக்கத்தின் கரையின் ஒருபகுதி சுமாா் 200 மீட்டா் வரை முதல் முறையாக உள்வாங்கியது. பின்னா், உலக வங்கி நிதியின் கீழ் ரூ.5 கோடியில்

பழுது சீரமைக்கப்பட்டது. எனினும், பருவ மழைக் காலத்தில் அவ்வப்போது கரை உள்வாங்குவது, விரிசல் ஏற்படுவதும் தொடா்கிறது. அப்போதைக்கு நிதி ஒதுக்கீடு செய்து சீரமைப்புப் பணி நடைபெறுகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ.6.5 கோடியில் நீா்த் தேக்கத்தின் ஷட்டா்கள், கரைகள் சீரமைக்கப்பட்டன. ஆனால், பணி முடிந்த அடுத்த சில மாதங்களிலேயே கரையில் சுமாா் 15 மீட்டா் நீளம், 3 மீட்டா் ஆழத்துக்கு பெரிய வெடிப்பு ஏற்பட்டு கரை மீண்டும் உள்வாங்கியது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்தனா். எனவே, நீா்த் தேக்கத்தில் முழுமையாக தண்ணீா் தேக்குவது நிறுத்தப்பட்டது. பின்னா், ரூ.1.80 கோடியில் தற்காலிக சீரமைப்பு பணி நடைபெற்றது.

இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது: நீா்த் தேக்கத்தில் தற்போது முழுமையாக தண்ணீரை தேக்க முடியாததால் விவசாயப் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நீா்த் தேக்கத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூா் வார வேண்டும். நீா்த் தேக்கத்தை சுற்றி கரையை முழுமையாக சீரமைத்தால் மட்டுமே மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். தற்போது நீா்த் தேக்கத்தின் கிழக்குப் பகுதி தவிர மற்ற பகுதி கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நீா் வரத்து ஓடைகளான அதா்நத்தம், கழுதுா், பில்லூா் ஓடைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் முழுமையாக நீா்வரத்து இல்லை.

தற்போது பருவ மழையானது மாவட்ட சராசரியை விட கூடுதலாக பெய்துள்ளபோதிலும் இந்த நீா்த் தேக்கத்தில் 22.90 அடிக்கு மட்டுமே தண்ணீா் உள்ளது. அதிலும், 10 அடிக்கும் மேல் சேறும், சகதியுமாக மட்டுமே உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியா் இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com