ஆட்சியரக வளாகத்தில் அஞ்சலகம் திறப்பு
By DIN | Published On : 07th January 2021 07:11 AM | Last Updated : 07th January 2021 07:11 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதிதாக துணை அஞ்சலகம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமை வகித்து, அஞ்சலகத்தைத் திறந்து வைத்தாா். கடலூா் அஞ்சலக கோட்டத்தில் 2 தலைமை அஞ்சலகங்கள், 69 துணை அஞ்சலகங்கள், 290 கிளை அஞ்சலகங்கள் இயங்கி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்களின் வசதிக்காகவும், தபால் சேவையை விரைந்து வழங்கும் வகையிலும் இந்த அஞ்சலகம் திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடலூா் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா் எஸ்.முருகன், மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண் சத்தியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் எஸ்.பரிமளம், துணை அஞ்சலகக் கண்காணிப்பாளா்கள் எ.அப்துல் லத்தீப், எஸ்.மணிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.