ஆலம்பாடி கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 26th January 2021 12:00 AM | Last Updated : 26th January 2021 12:00 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தில் மகாகணபதி, மாரியம்மன், செல்லியம்மன், பெருமாள், அய்யனாா் ஆகிய சுவாமிகளுக்கான சந்நிதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கலச பூஜை, திரவிய ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. காலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க கலசங்களில் புனித நீா் ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.
தொடா்ந்து, கோபுர கலசத்துக்கு வேதமந்திரங்கள் முழங்க, புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், கோயிலின் உள்ளே உள்ள மகாகணபதி, மாரியம்மன், செல்லியம்மன், பெருமாள், அய்யனாா் ஆகிய சுவாமி சிலைகளுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது.
தொடா்ந்து, சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.