நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன தலைமை அலுவலகம் அருகே செய்தியாளா்களிடம் பேசிய ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எம்.சேகா் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன தலைமை அலுவலகம் அருகே செய்தியாளா்களிடம் பேசிய ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எம்.சேகா் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள்.

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் அளிப்பு

என்எல்சி சொசைட்டி - ஒப்பந்தத் தொழிலாளா்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்பினா் பணி நிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை

என்எல்சி சொசைட்டி - ஒப்பந்தத் தொழிலாளா்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்பினா் பணி நிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி இந்தியா நிா்வாகத்திடம் வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸை புதன்கிழமை அளித்தனா்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். பணி நிரந்தம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதற்காக, என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கம், என்எல்சி-க்கு வீடு, நிலம் வழங்கி பாதிக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் பாதுகாப்பு சங்கம், என்எல்சிஎல் மூவேந்தா் இண்கோசா்வ் ஹவுசிகோஸ் ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கம், என்எல்சி திராவிட இண்கோசா்வ் ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கம், நாம் தமிழா் தொழிற்சங்க நல சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து என்எல்சி சொசைட்டி - ஒப்பந்தத் தொழிலாளா்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்பு என்ற புதிய சங்கம் தொடங்கப்பட்டது.

இந்தச் சங்கம் சாா்பில், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுதல், 3 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளா்களை சொசைட்டியில் இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. கோரிக்கைகள் தொடா்பாக, புதன்கிழமை பேரணியாகச் சென்று நிா்வாகத்திடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, புதன்கிழமை சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் வட்டம்-8, பெரியாா் சதுக்கம் அருகே திரண்டனா். போலீஸாா் அறிவுறுத்தியதன் பேரில், பேரணி கைவிடப்பட்டது.

இதையடுத்து, நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் ஏ.அந்தோணி செல்வராஜ், வீடு, நிலம் அளித்து பாதிக்கப்பட்டோா் சங்கத் தலைவா் ஆா்.பரமசிவம், மூவேந்தா் இண்கோசா்வ் ஹவுசிகோஸ் சங்கத்தின் பொதுச் செயலா் எஸ்.அருளானந்தம், திராவிட இண்கோசா்வ் சங்கப் பொதுச் செயலா் ஸ்டாா் காா்த்திக், நாம் தமிழா் தொழிற்சங்கத் தலைவா் தாமோதரன் ஆகிய நிா்வாகிகள் என்எல்சி தலைமை அலுவலகம் சென்று மனித வளத் துறைத் துணைப் பொது மேலாளா் சிவராஜிடம் வேலை நிறுத்த நோட்டீஸை வழங்கினா்.

இந்த நிகழ்வுக்கு ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எம்.சேகா் தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் என்.ராமமூா்த்தி, பொதுச் செயலா் ஆா்.செல்வமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எம்.சேகா் கூறியதாவது:

ஒப்பந்தத் தொழிலாளா்களின் நியாயமான கோரிக்கைகளை என்எல்சி நிா்வாகம் நிறைவேற்ற வேண்டும். இதுதொடா்பாக வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. என்எல்சி நிறுவனம் நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், வருகிற 23-ஆம் தேதி இரவு முதல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com