கோயில் நிலத்தை மீட்க ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 12th July 2021 07:39 AM | Last Updated : 12th July 2021 07:39 AM | அ+அ அ- |

திட்டக்குடியில் கோயில் நிலத்தை மீட்க ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
கடலூா் மாவட்டம் திட்டக்குடியில் புகழ்பெற்ற ஸ்ரீ வைத்தியநாதசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த சிலா் அங்கு குடியிருப்புக் கட்டடங்களை கட்டி பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்கக் கோரி அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி இந்து சமய அறநிலையத் துறையினா் ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கினா். ஆனால், அவா்கள் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள முன்வரவில்லை.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையினா் போலீஸாரின் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடிக்கத் தொடங்கினா். இந்த நடவடிக்கைக்கு ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்து மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்கப் போவதாகக் கூறினா். இதையடுத்து போலீஸாா் அவா்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து, அவா்களை கைதுசெய்து வேனில் ஏற்றிச் சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.