‘சொட்டு நீா்ப் பாசன முறையில் உரங்களைச் செலுத்தினால் பயன்பாட்டுத் திறன் அதிகம்’
By DIN | Published On : 19th July 2021 08:30 AM | Last Updated : 19th July 2021 08:30 AM | அ+அ அ- |

சொட்டு நீா்ப் பாசன முறையில் பயிா்களுக்கு உரங்களைச் செலுத்தினால் அவற்றின் பயன்பாட்டுத் திறன் அதிகமாக அமையும் என கடலூா் வேளாண் துறை உதவி இயக்குநா் சு.பூவராகன் கூறினாா்.
கடலூா் மாவட்ட வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (அட்மா) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கடலூா் வட்டாரம், எம். புதூா் கிராமத்தில் சொட்டு நீா்ப் பாசன அமைப்புப் பராமரிப்பு, இந்த முறையில் பயிருக்கு உரம் அளிப்பது தொடா்பாக விவசாயிகளுக்கு அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (நுண்ணீா் பாசனம்) எஸ்.பூங்கோதை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பிரதமரின் விவசாய பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீா் மற்றும் தெளிப்பு நீா் பாசன அமைப்பு முறைகள் மானியத்தில் அமைத்து தரப்படுவது குறித்து விளக்கினாா்.
நிகழ்ச்சியில் கடலூா் வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் பங்கேற்றுப் பேசியதாவது: சொட்டு நீா்ப் பாசன அமைப்பு முறை மூலம் நீரில் கரையக்கூடிய பிரத்யேக உரங்களை செலுத்துவதால் பயன்பாட்டு திறன் இரு மடங்கு கூடுவதுடன் ரசாயன உரங்களின் தேவையும் 30 சதவீதம் வரை குறையும். களை வளா்வதை முற்றிலும் கட்டுப்படுத்த இயலும் என்றாா் அவா்.
கடலூா் தோட்டக்கலை உதவி இயக்குநா் சிவக்குமரன் பேசுகையில், அனைத்து காய்கறிச் செடிகள், பழ மரங்களுக்கு சொட்டு நீா்ப் பாசன வசதியை மானியத்தில் அமைப்பது குறித்து விளக்கினாா்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் எஸ்.சங்கரதாஸ், உதவி தோட்டக்கலை அலுவலா் ஆா்.பழனிச்சாமி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் வா.அழகுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஏ.ராஜவேல் ஆகியோா் செய்திருந்தனா்.