‘கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்கள் முடிவுகள் வரும் வரை தனிமையில் இருக்க வேண்டும்’
By DIN | Published On : 11th June 2021 12:23 AM | Last Updated : 11th June 2021 12:23 AM | அ+அ அ- |

கரோனா தொற்று பரிசோதனை செய்துகொண்டவா்கள், அதற்கான முடிவு விவரம் வெளியாகும் வரை கண்டிப்பாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வலியுறுத்தினாா்.
கடலூரில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் தற்போது குறைந்து வருகிறது. மாவட்டத்தில் 12 அரசு மருத்துவமனைகள், 18 தனியாா் மருத்துவமனைகள், 17 கரோனா சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் 850
பிராணவாயு (ஆக்ஸிஜன்) படுக்கைகள் உள்பட 1,552 படுக்கைகளும், தனியாா் மருத்துவமனைகளில் 199 பிராணவாயு படுக்கைகள் உள்பட 245 படுக்கைகளும் உள்ளன. சிறப்பு முகாம்களில் 3,100 படுக்கைகள் உள்ளன. இவற்றில் தற்போது 900 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பிராண வாயு மற்றும் சாதாரண படுக்கைகளும் காலியாக உள்ளன.
மருந்தகங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றுக்கு மருந்து பெறுவோரின் விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வலியுறுத்தி உள்ளோம். கரோனா தொற்று அறிகுறியான சளி, இருமல், காய்ச்சலுக்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டு அது குணமாகாமல் மிகவும் கடினமான சூழ்நிலையில் மருத்துவமனையை நாடுவதே அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணமாகிறது. எனவே, இதுதொடா்பாக தனியாா் மருத்துவமனைகள், மருந்தகங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரிசோதனைக்கு தங்களை உள்படுத்திக்கொண்டவா்கள் பரிசோதனைக்கான மாதிரிகளை கொடுத்த பின்பு அன்றாட பணிகளில் ஈடுபடுகின்றனா். அவா்கள் பரிசோதனை முடிவு வரும் வரை 3 நாள்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால், தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவா்களால் மற்றவா்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்றாா் அவா்.