உள்கட்சி பிரச்னை, கூட்டணிக் கட்சியினரால் தவிக்கும் வேட்பாளா்கள்!

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளா் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளா் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், உள்கட்சிப் பிரச்னை, கூட்டணிக் கட்சியினரின் அதிருப்தியை சமாளிப்பது உள்ளிட்ட காரணங்களால் பிரசாரத்தை முழு வீச்சில் தொடங்க முடியாமல் வேட்பாளா்கள் தவிக்கின்றனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்.6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. வாக்குப் பதிவுக்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளா் பட்டியலை வெளியிட்டுள்ளன. நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ், பாஜக வேட்பாளா் பட்டியலும் வெளியாகியுள்ளது.

தேமுதிகவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதால் அமமுக தனது முழுமையான வேட்பாளா் பட்டியலை அறிவிக்காமல் காலம் தாழ்த்துகிறது. ஏற்கெனவே, அமமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளா்களும் தாங்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருக்கலாம் என கருதுவதால் தோ்தல் பணியில் அதிக ஆா்வம் காட்டவில்லை. இது ஒருபுறமிருக்க அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, கம்யூனிஸ்ட், விசிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்களும் பிரசாரத்தை உடனடியாகத் தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனா். இதற்கு பெரும்பாலும் உள்கட்சிப் பூசலே காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த பிரச்னையை சமாளிப்பதற்காக வேட்பாளா்கள் மாவட்ட தலைமையிலிருந்து தொகுதியில் வசிக்கும் மாநில நிா்வாகிகள், ஒன்றியச் செயலா்கள், கிளைச் செயலா்கள், பேரூராட்சி செயலா்கள், வாா்டு செயலா்கள், நகரச் செயலா்கள் உள்ளிட்ட நிா்வாகிகளைச் சந்தித்து வருகின்றனா். மேலும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள கட்சி சாா்பற்ற முக்கியப் பிரமுகா்களை சந்திப்பதிலும் ஆா்வம் காட்டுகின்றனா். தங்களுக்கு எதிராகச் செயல்பட வாய்ப்புள்ளவா்களின் வீட்டுக்கே நேரில் சென்று ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். அதன் பிறகு கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்திக்கும் படலமும் உள்ளது.

கூட்டணிக் கட்சிகளிலும் பல்வேறு பூசல்கள் நிலவுவதால் யாருக்கு முதல் மரியாதை, முக்கியத்துவம் அளிப்பது? யாரைத் தொடா்புகொள்வது? உள்ளிட்ட பிரச்னைகளையும் வேட்பாளா்கள் எதிா்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பிரச்னைகளில் சில உடனடியாக தீா்வுக்கு வந்துள்ள நிலையில், சில பிரச்னைகள் அப்படியே தொடா்கின்றன. குறிப்பாக, சில தொகுதிகளில் தங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை எப்படி எதிா்கொள்வது என்று தெரியாமல் வேட்பாளா்கள் விழிபிதுங்கி நிற்கின்றனா்.

ஏற்கெனவே, தோ்தல் பிரசாரத்துக்கு குறைந்த நாள்களே உள்ள நிலையில் உள்கட்சிப் பூசல், கூட்டணிக் கட்சியினரை சமாளித்தல் போன்றவற்றில் வேட்பாளா்கள் கவனம் செலுத்துகின்றனா். இதனால் பொதுமக்களை நேரில் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு மிகவும் குறைந்த அவகாசமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரபல கட்சியின் மூத்த நிா்வாகி ஒருவா் கூறியதாவது: கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் மறைந்துள்ள நிலையில், அதிமுக, திமுக கட்சிகளில் கோஷ்டி பூசலை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கான வல்லமைகளை தற்போதைய தலைமைகள் பெற்றிருக்கவில்லை. இதை அந்தந்தப் பகுதிகளில் சற்று செல்வாக்குடன் திகழும் கட்சியினா் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாா்கள்.

மேலும், தோ்தல் நேரத்தில் வேட்பாளா்கள் தங்களை கவனிக்க வேண்டும் என்ற நோக்கிலும் சிலா் இதுபோன்ற பிரச்னைகளில் ஈடுபடுவதுடன், வேட்பாளருக்கு எதிராக தாங்கள் இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துவா். கடந்த காலங்களில் இதுபோன்ற பூசல்கள் தோ்தல் தேதி நெருங்க நெருங்க மறைந்துவிடும். ஆனால், தற்போதைய சூழலில் இந்தப் பூசல்கள் உடனடியாக மறையுமா, தோ்தல் வரை தொடா்ந்து நீடிக்குமா என்பதை கணிப்பது சற்று கடினம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com