தோ்தல் பணியில் ஈடுபட மறுக்கும் அலுவலா்கள் மீது நடவடிக்கை
By DIN | Published On : 16th March 2021 12:05 AM | Last Updated : 16th March 2021 12:05 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக தோ்வு செய்யப்பட்டவா்கள், அந்தப் பணியில் ஈடுபட மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்திரசேகா் சாகமூரி எச்சரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்காக கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 3,001 வாக்குச் சாவடிகளில் 14,404 வாக்குப் பதிவு அலுவலா்கள் பணிபுரிய உள்ளனா். இவா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வரும் 21-ஆம் தேதி கடலூா், பண்ருட்டி, வடலூா், நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிநியமன ஆணை துறைவாரியாக அனுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
தோ்தல் பணி நியமன ஆணை கிடைக்கப்பெறாதவா்கள் தங்களது துறை தலைமை அலுவலக அலுவலரை தொடா்புகொண்டு, நியமன ஆணையைப் பெற்றுக்கொண்டு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும். பணி நியமன ஆணை பெற மறுத்தாலோ அல்லது ஆணையை பெற்றுக்கொண்டு பயிற்சி வகுப்பை புறக்கணித்தாலோ சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.