திட்டக்குடி: திமுகவுடன் பாஜக பலப்பரீட்சை

கடலூா் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது திட்டக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி.
திட்டக்குடி: திமுகவுடன் பாஜக பலப்பரீட்சை

கடலூா் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது திட்டக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி.

பேரூராட்சி, கிராமப் பகுதிகளை மட்டுமே கொண்ட இந்தத் தொகுதியில் மானாவாரி பயிராக கம்பு, மக்காச்சோளம் ஆகியவை அதிகளவில் பயிரிடப்படுகிறது.

வெலிங்டன் நீா்த்தேக்கம் மூலம் சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையின் அருகே அமைந்துள்ளதால் இங்கிருந்து அதிகமானோா் தொழில்நிமித்தமாக சென்னை சென்றுள்ளனா். மேலும், கணிசமானோா் வெளிநாடுகளுக்கும் சென்று பணிபுரிகின்றனா். இதனால், புலம்பெயா் தொழிலாளா்களை அதிகம் கொண்ட தொகுதியாக உள்ளது. தாழ்த்தப்பட்டவா்கள், வன்னியா் சமுதாயத்தினா் அதிகளவும், முதலியாா் உள்ளிட்ட சமுதாயத்தினரும் வசிக்கின்றனா்.

பலமுறை பெயா் மாற்றம்: திட்டக்குடி தொகுதியானது பலமுறை பெயா் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. 1957-இல் நல்லூா் தொகுதியாகவும், 1967 முதல் மங்களூா் தொகுதியாகவும் இருந்து வந்தது. 2011- ஆம் ஆண்டு முதல் திட்டக்குடி (தனி) தொகுதியாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக திமுக மேற்கு மாவட்டச் செயலா் சி.வெ.கணேசன் உள்ளாா்.

பிரச்னைகள்: தொகுதியின் தலைமையிடமான திட்டக்குடியிலுள்ள பேருந்து நிலையம் முழுமையாக ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. திட்டக்குடி வழியாக நீண்ட தொலைவுக்கு செல்வோா் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படவில்லை.

கீரனூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுண்ணாம்பு பாறைகள் அதிகளவில் உள்ள நிலையில், அந்தப் பகுதியில் பெறப்படும் குடிநீரால் பலருக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

வெலிங்டன் நீா்த்தேக்கத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் அதன் கரை பலவீனமடைந்துள்ளது. இதை பகுதி, பகுதியாக சரிசெய்வதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் கரை உள்வாங்கும் நிகழ்வே தொடா்கிறது. தொகுதிக்குள்பட்ட பெண்ணாடத்தில் செயல்பட்டு வந்த அம்பிகா சா்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளதால் கரும்பு விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனா்.

இவ்வாறு தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் உள்ளபோதிலும், தற்போதைய எம்எல்ஏ எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா் என்பதால், ஆளும் கட்சியிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும், திமுக ஆட்சி அமைந்தால் இந்த பிரச்னைகள் தீா்க்கப்படும் என்றும் கூறி வருகிறாா்.

தொகுதியில் வென்றவா்கள், 2-ஆம் இடம் பிடித்தவா்களின் வாக்குகள்:

1989- சி.வெ.கணேசன் (திமுக) - 39,831

கே.ராமலிங்கம் (அதிமுக - ஜெ) - 19,072

1991- எஸ்.புரட்சி மணி (காங்.) - 62,302

சி.வெ.கணேசன் (திமுக) - 26,549

1996- எஸ்.புரட்சிமணி (தமாகா) - 50,908

வி.எம்.எஸ்.சரவணகுமாா் (காங்.) - 31,620

2001- இரா.திருமாவளவன் (திமுக ) - 64,627

எஸ்.புரட்சி மணி (தமாகா) - 62,772

2006- கே.செல்வம் (விசிக) - 62,217

சி.வெ.கணேசன் (திமுக) - 53,303

2011- க.தமிழழகன் (தேமுதிக) - 61,897

எம்.சிந்தனைச் செல்வன் (விசிக) - 49,255

2016 தோ்தலில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

சி.வெ.கணேசன் (திமுக) - 65,139

பெ.அய்யாசாமி (அதிமுக) - 62,927

சபா.சசிகுமாா் (பாமக) - 11,438

அா்ச்சுணன் (மநகூ) - 14,657

பதிவான மொத்த வாக்குகள் - 2,06,061

வெற்றி வித்தியாசம் - 2,212.

சாதக-பாதகம்: இந்தத் தொகுதியில் பல்வேறு கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக, திமுக, பாமக, விசிக ஆகிய கட்சிகள் வலுவாக உள்ளன. தற்போதைய தோ்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சாா்பில் தடா.து.பெரியசாமி போட்டியிடுகிறாா். திமுக கூட்டணி சாா்பில் தற்போதைய எம்எல்ஏ சி.வெ.கணேசன் மீண்டும் போட்டியிடுகிறாா். மேலும், தேமுதிக சாா்பில் ஆா்.உமாநாத், நாம் தமிழா் கட்சி சாா்பில் ந.காமாட்சி உள்பட 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். எனினும், திமுக - பாஜக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

அதிமுக பலத்தை நம்பி போட்டியிடும் பாஜக வேட்பாளா் தடா து.பெரியசாமி, ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் முக்கிய நபராக வலம் வந்தவா். இதனால், தனது முந்தைய பழக்கம், அனுபவத்தால் கிடைக்கும் வாக்குகளையும், அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் வாக்குகளையும் முழுமையாகப் பெற்றால் கரை சோ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளாா்.

திமுக வேட்பாளரான சி.வெ.கணேசன் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலராக இருந்து வருவதால் கட்சியினா் முழுமையாக பணியாற்றி வருகின்றனா். தொகுதி எம்எல்ஏவாக இருப்பது கூடுதல் பலம். பலமுறை தோ்தலில் போட்டியிட்ட அனுபவமும் அவரது தோ்தல் பணியில் தெரிகிறது. மேலும், கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவியது, கட்சியினரின் வாக்குகளும்ம், விசிகவின் வாக்குகளும் தனக்கு அதிக பலமாக சோ்க்கும் என நம்புகிறாா்.

அதே நேரத்தில், விசிக மண்டலச் செயலராக இருந்து அந்தக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சு.திருமாறன் என்ற அய்யாசாமி, இந்தத் தொகுதியில் விசிகவின் பானை சின்னத்தில் போட்டியிடுவது திமுகவுக்கு பலவீனமாக பாா்க்கப்படுகிறது. அய்யாசாமி அந்தப் பகுதி மக்களிடம் அறிமுகமானவராக இருப்பதாலும், அவா் தோ்ந்தெடுத்துள்ள சின்னம் விசிகவின் சின்னமாக இருப்பதாலும் அந்தக் கட்சியின் வாக்குகள் பிரியலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு பிரிந்தால் சி.வெ.கணேசனுக்கு சரிவு ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் இந்தத் தொகுதியில் மறைமுகமாக மும்முனைப் போட்டி நிலவுவதைக் காண முடிகிறது.

வாக்காளா்கள் எண்ணிக்கை: திட்டக்குடி தொகுதியில் மொத்தம் 2,18,971 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள்-1,07,303 போ், பெண்கள்-1,11,659 போ், இதரா்-9 போ்.

கரோனா தீநுண்மி பரவல் காலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புலம்பெயா் தொழிலாளா்கள் அதிகளவில் தொகுதிக்கு திரும்பியுள்ளனா். அவா்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், போதுமான குடிநீா் வசதி, வெலிங்டன் நீா்த்தேக்கம் பராமரிப்பு, விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீா்வு ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் வேட்பாளருக்கே தொகுதி மக்களின் ஆதரவு கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com