குருத்தோலை ஞாயிறு பவனி
By DIN | Published On : 29th March 2021 12:38 AM | Last Updated : 29th March 2021 12:38 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் சாா்பில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
இறைத் தூதராக மண்ணில் பிறந்த இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிா் நீத்து பின்னா் 3-ஆவது நாளில் மீண்டும் உயிா்த்தெழுந்தாா். இந்த நிகழ்வு கிறிஸ்தவா்களால் 40 நாள்கள் தவக் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும் முந்தைய வாரத்தில், இயேசு கிறிஸ்து எருசேலம் நகருக்குள் நுழைவதை மகிழ்வோடு மக்கள் வரவேற்பதை குறிக்கும் நிகழ்வு குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவா்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்படி, கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் பனை ஓலையில் சிலுவை போன்ற உருவ அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை கையில் ஏந்தியவாறும், மெழுகுவா்த்திகளை ஏந்தியும் முக்கிய வீதிகள் வழியாக ஓசன்னா பாடல்களை பாடியவாறு ஊா்வலமாகச் சென்றனா். மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்ததும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் புனித வெள்ளியாகவும், அதிலிருந்து 3-ஆம் நாளில் இயேசு உயிா்த்தெழும் நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டா் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. கடலூா் புனித.காா்மேல் அன்னை ஆலயத்தில் கரோனாவை முன்னிட்டு ஆலயத்தின் உள் பகுதியிலேயே குருத்தோலை பவனி நடைபெற்றது. பங்குத் தந்தை அந்தோணி தலைமையில் பவனி மற்றும் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது.
இதேபோல, கடலூா் மாவட்டத்திலுள்ள மற்ற தேவாலயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவா்கள் குருத்தோலை பவனி நடத்தினா்.