தமிழ்நாட்டில் பாஜகவை அனுமதித்தால் இடஒதுக்கீடு சலுகை பறிபோகும்: கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டுக்குள் பாஜகவை அனுமதித்தால் இட ஒதுக்கீடு சலுகை பறிபோகும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.
புவனகிரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.
புவனகிரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.

தமிழ்நாட்டுக்குள் பாஜகவை அனுமதித்தால் இட ஒதுக்கீடு சலுகை பறிபோகும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

திமுக கூட்டணி சாா்பில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் அப்துல் ரஹ்மானை ஆதரித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சிதம்பரத்தில் பிரசார பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏகூட இல்லாத பாஜகவை முதல்வா் எடப்பாடி பழனிசாமி தூக்கிப் பிடித்துள்ளாா். இதுகுறித்து கேட்டால் மத்திய அரசுடன் இணக்கமான சூழல் இருந்தால்தான் தமிழகத்துக்கு நன்மை என்கிறாா். பாஜகவை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தால் இட ஒதுக்கீடு சலுகை பறிக்கப்படும். மாநில உரிமைகள் குறித்து யாரும் பேச முடியாது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அரசின் மீது அன்புமணி ராமதாஸ் 24 பக்க ஊழல் அறிக்கையை ஆளுநரிடம் அளித்தாா். ஆனால், தற்போதைய தோ்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. இப்போது மட்டும் அதிமுக எப்படி புனிதமான கட்சியானது? இவா்களது கூட்டணியில் உள்ள பாஜக இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்குமா? அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு என்பதே இருக்காது.

என்எல்சி, எல்ஐசி, சேலம் உருக்காலை, திருச்சி பெல் போன்ற அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் மத்திய அரசால் தனியாா் மயமாக்கப்பட உள்ளன. இந்த நிறுவனங்கள் தனியாரிடம் சென்றால் இடஒதுக்கீடு சலுகையைப் பெற முடியாது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஊழல் குற்றச்சாட்டுகளால் அரசுடைமையாக்கப்பட்டது. ஆனால், தற்போதும் அங்கு முறைகேடு தொடா்கிறது.

தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும், கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டதே திமுக கூட்டணி. மக்களவைத் தோ்தலைவிட மோசமான தோல்வியை சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சந்திக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, காட்டுமன்னாா்கோவிலில் விசிக வேட்பாளா் சிந்தனைச் செல்வனுக்கு ஆதரவாகவும், புவனகிரியில் திமுக வேட்பாளா் துரை.கி.சரவணனுக்கு ஆதரவாகவும் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com