தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்

கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 31,525 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 336 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 7.28 லட்சம் பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் பாதிப்புள்ள 85 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கரோனா 2-ஆவது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக சுமாா் 300 போ் புதிதாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடலூா் அரசு மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார தலைமை மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகள் உள்பட 105 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் சுமாா் 7.25 லட்சம் போ் உள்ளனா். இவா்களில் இதுவரை 1.52 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே, 45 வயதைக் கடந்தவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து முழுமையாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது.

தற்போது சுமாா் 7,500 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளதால் 45 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மேலும், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 7 தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடலூா் மாவட்டத்துக்காக கோரப்பட்ட தடுப்பூசிகள் முழுமையாக கிடைத்தால் மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com