கடலூா் மாவட்டத்துக்கு முதல் முறையாக 2 அமைச்சா்கள்

கடலூா் மாவட்டத்துக்கு முதல் முறையாக 2 அமைச்சா்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்துக்கு முதல் முறையாக 2 அமைச்சா்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக புதிய அமைச்சரவை பட்டியல் அதிகாரப்பூா்வாக வியாழக்கிழமை வெளியானது. இதில், திமுக உயா்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், குறிஞ்சிப்பாடி தொகுதி எம்எல்ஏவுமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இவருக்கு வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீா்வை, கரும்பு பயிா் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு ஆகிய இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவா் ஏற்கெனவே கடந்த 1996-2001-ஆம் ஆண்டுகளில் தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சராகவும், 2006-11-ஆம் ஆண்டுகளில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா்.

இதேபோல திட்டக்குடி தொகுதி எம்எல்ஏவும், கடலூா் மேற்கு மாவட்ட திமுக செயலருமான சி.வெ.கணேசனும் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு தொழிலாளா்கள் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு ஆகிய இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவா் தற்போது முதல் முறையாக அமைச்சராகிறாா்.

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 7 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 5 தொகுதிகளில் திமுக போட்டியிட்ட நிலையில் 4 போ் வெற்றி பெற்றனா். இவா்களில் இருவா் அமைச்சா்களாக தோ்வாகியுள்ளனா்.

கடலூா் மாவட்டத்தைப் பொருத்தவரை எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அமைச்சரவையில் இடம் பெற்று வந்துள்ளது. இதில் முதல் முறையாக கடலூா் மாவட்டம் தற்போது இரண்டு அமைச்சா்களை பெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com