என்.எல்.சி.யில் பிராணவாயு உற்பத்தியை முழுவீச்சில் தொடங்க வேண்டும்
By DIN | Published On : 11th May 2021 02:20 AM | Last Updated : 11th May 2021 02:20 AM | அ+அ அ- |

கடலூா்: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பிராணவாயு (ஆக்ஸிஜன்) உற்பத்தி பணிகளை முழுவீச்சில் தொடங்க வேண்டுமென காட்டுமன்னாா்கோவில் தொகுதி எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் வலியுறுத்தினாா்.
அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் விசிக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் சிந்தனைச் செல்வன். இவா், தனது தொகுதிக்கான வளா்ச்சிப் பணிகள் குறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரியை சந்திப்பதற்காக திங்கள்கிழமை கடலூா் வந்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா நோயாளிகளை காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையிலிருந்து சிதம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை. இதற்கும், 108 ஆம்புலன்ஸ் வாகனம் பயன்படுத்தப்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்ற அவசர அழைப்புகளுக்காக அனுப்பி வைக்கப்படுவதால், கரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்காக தனியாக ஆம்புலனஸ் வசதி தேவை.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் பிராணவாயு உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம், அதற்கான கட்டமைப்புகளை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தினா் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் தன்னியல்பாக பிராண வாயு உற்பத்தி பணியை சிறிய அளவில் தொடங்கியுள்ளனா். மாவட்ட நிா்வாகம் உரிய அழுத்தம் தருமானால் கடலூா் மாவட்டம் மட்டுமல்லாது இங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கும் பிராண வாயு உற்பத்தி செய்து வழங்க முடியும். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் என்எல்சி.க்கு உரிய அழுத்தம் தந்து அவா்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதேபோல, பரங்கிப்பேட்டையில் உள்ள தனியாா் அனல் மின் நிலையத்திலும் பிராண வாயு உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்றாா் அவா்.