போலி உயிரி பூச்சி மருந்து விற்பனை செய்தால் உரிமம் ரத்து
By DIN | Published On : 14th May 2021 08:42 AM | Last Updated : 14th May 2021 08:42 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் போலி உயிரி பூச்சி மருந்து, உயிரி ஊக்கிகள் விற்பனை செய்தால், மருந்து விற்பனைக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுமென வேளாண் துறை எச்சரித்தது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் தி.சு.பாலசுப்ரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:
வெளி மாநிலத்தில் உயிரி பூச்சி மருந்துகளுடன் இதர பூச்சிக்கொல்லி மருந்துகளை கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. எனவே, கடலூா் மாவட்டத்தில் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாவட்டத்தின் அனைத்து பூச்சி மருந்து விற்பனைக் கடைகளிலும் உரிய ஆய்வு மேற்கொள்ள முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஆய்வின்போது, போலியான உயிரி பூச்சி மருந்து விற்பனை, போலி உயிரி பூச்சி மருந்துகளுடன் இதர பூச்சிக்கொல்லி மருந்துகளை கலப்படம் செய்து விற்பனை செய்வது தெரியவந்தால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், பூச்சிக்கொல்லிகள் சட்ட விதிகளின்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறான போலி உயிரி பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களுக்கான அங்ககச் சான்று கிடைக்கப் பெறுவது கடினமாகும். இதுதவிர, விளைபொருள்களின் தரம், மதிப்பும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இது தொடா்பான புகாா்களை உரிய வட்டார வேளாண் உதவி இயக்குநா்களிடம் தெரிவிக்கலாம்.
மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் உயிரி ஊக்கிகள், உரக்கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் கொண்டுவரப்பட்டு, அவற்றின் விவரங்கள் மத்திய அரசின் உரக்கட்டுப்பாட்டு ஆணையரிடம் 6 மாத காலத்துக்குள் பதிவு செய்திட வேண்டுமென மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. எனவே, இத்தகைய உயிரி ஊக்கிகளின் விற்பனையையும் கண்காணித்திட வட்டார அளவிலான உர ஆய்வாளா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.