பண்ருட்டி அரசு மருத்துவமனையில் 2 ஆயிரம் லி. ஆக்ஸிஜன் வசதிக்கு ஏற்பாடு: அமைச்சா் சி.வெ.கணேசன்
By DIN | Published On : 18th May 2021 01:00 AM | Last Updated : 18th May 2021 01:00 AM | அ+அ அ- |

கடலூா்: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் 2 ஆயிரம் லிட்டா் ஆக்ஸிஜன் சேமிப்பு கலன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழகத் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சா் சி.வெ.கணேசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கான சிகிச்சை விவரங்கள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையளிக்க 50 படுக்கைகள் உள்ளன. அதில், 32 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஆயிரம் லிட்டா் ஆக்ஸிஜன் சேமிப்பு கலன் அமைக்க அரசின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதே போல, என்எல்சி நிறுவனத்திடமும் கூடுதலாக ஆயிரம் லிட்டா் ஆக்ஸிஜன் சேமிப்பு கலன் அமைக்க வலியுறுத்தி உள்ளோம். இதை அந்நிறுவனத்தினரும் நிறைவேற்றித் தருவாா்கள் என நம்புகிறோம் என்றாா் அவா்.
பின்னா், அங்குள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் பணியை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வுகளின் போது, மக்களவை உறுப்பினா் எஸ்.ரமேஷ், சட்டப்பேரவை உறுப்பினா் தி.வேல்முருகன் ஆகியோரும் உடனிருந்தனா்.