சிதம்பரம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியை அதிகரிக்க எம்எல்ஏ கோரிக்கை
By DIN | Published On : 21st May 2021 08:45 AM | Last Updated : 21st May 2021 08:45 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதியை அதகரிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியத்திடம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் மனு அளித்தாா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் கரோனா தடுப்பு தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியத்திடம் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் சிதம்பரம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருபவா்களுக்கு படுக்கைகள் கிடைக்காத சூழல் நிலவி வருகிறது. எனவே, இந்த மருத்துவமனையில் தேவையான அளவு படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
குறிப்பாக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான மாணவா்கள் தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றை தற்காலிக கரோனா சிகிச்சை மையமாக மாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு மருத்துவமனையில் படுக்கை இல்லை என்ற நிலையை மாற்ற வேண்டும்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கோல்டன் ஜூப்ளி மாணவா் விடுதி மற்றும் சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றில் செயல்பட்டு வரும் தற்காலிக சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
மேலும், கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தரமான, சத்தான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை பூா்த்தி செய்திட வேண்டும். மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்கி தடுப்பூசி செலுத்த வரும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டுமென அந்த மனுவில் கே.ஏ.பாண்டியன் தெரிவித்துள்ளாா்.